மாநில அரசின் கீழ் செயல்படும் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்குத்தான் இருக்கிறது. ஆகவே, மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் அந்தந்த மாநில அரசுகளின் பரிந்துரை அடிப்படையில், மாநில ஆளுநர்கள் நியமனம் செய்வார்கள். இதுதான், நீண்டகால நடைமுறையாக இருந்துவருகிறது.
மாநில அரசுகளின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாநில ஆளுநர் இருக்கும் நிலையில், பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் துணைவேந்தர்கள் நியமனங்களில் பெரும் சர்ச்சை நிலவிவருகிறது. ஆளுநர்களுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவுகிறது.
உதாரணமாக, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இந்தப் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அதனால், துணைவேந்தர் நியமன விவகாரத்தில், மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை நாடும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
மேற்கு வங்கத்தில் மாநில அரசின் கீழ் இயங்கிவரும் ஆறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர் சி.வி.ஆனந்த போஸுக்கும், மம்தா பானர்ஜி அரசுக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றுவந்தது.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம், மேற்கு வங்கத்தில் மாநில அரசை கலந்தாலோசிக்காமல் ஆறு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிகத் துணைவேந்தர்களை தன்னிச்சையாக நியமித்தார் ஆளுநர்.
ஆகவே, ‘மாநிலத்தின் கல்வி முறையை சீர்குலைக்க ஆளுநர் முயல்கிறார்’ என்று குற்றம்சாட்டிய மேற்கு வங்க மாநில அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில், ‘மாநில அரசு வழங்கும் பட்டியலிலிருந்து தகுதிவாய்ந்த நபர்களை பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாக நியமனம் செய்யுங்கள்’ என்று மேற்கு வங்க ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டிருக்கிறது.
மேலும், காலியாக இருக்கும் துணைவேந்தர் பதவிகளுக்கு, பெயர் பட்டியலை ஆளுநருக்கு அனுப்புமாறு மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தமிழகத்திலும் துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுடன் மோதிக்கொண்டே இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழக அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளில் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதும், மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல் செயல்படுவதுமாக தொடர்ந்து சர்ச்சையை உருவாக்கிக்கொண்டிருக்கிறார் ஆர்.என்.ரவி.
இன்றுவரையில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான சிக்கல் நீடிக்கவே செய்கிறது. இந்த நிலையில், மேற்கு வங்க அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தற்போது பிறப்பித்திருக்கும் உத்தரவு தமிழ்நாட்டுக்கும் பொருந்தும் அல்லவா?.
ஏனெனில், மாநிலப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மாநில அரசால் உருவாக்கப்பட்டு, மாநில அரசால் நிர்வகிக்கப்படுபவை. எனவே, பல்கலைக்கழகங்கள் மீது மாநில அரசுக்கே முழுமையான அதிகாரம் இருக்கிறது; ஆளுநர்கள் தலையிடக் கூடாது என்பதையே உச்சநீதிமன்ற உத்தரவு மீண்டும் இடித்துரைத்துள்ளது.
ஆளுநர்களுக்கும் பாஜக ஆளாத மாநில அரசுகளுக்கும் நடக்கும் இந்த மோதலுக்கு என்றைக்குத் தான் முற்றுப்புள்ளி வைக்கப்படுமோ தெரியவில்லை!