சமீபத்தில் மிக்ஜாம் புயல் சென்னையைப் புரட்டிப் போட்டது. வானிலை மையத்தின் துல்லிய கணிப்பால் முன்கூட்டியே உஷாரான தமிழ்நாடு அரசு மீட்புப் பணிகளை திட்டமிட்டு அதிதீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. ஒன்றிய அரசின் ஆய்வுக்குழுவும் பாராட்டிச் சென்றது.
பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு நிவாரணம் வழங்குவது கூட இன்னும் நிறைவடையாத நிலையில், சோதனை மேல் சோதனை என்பது போல நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில அதிகனமழை கொட்டித் தீர்த்தது. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் பெய்து தீர்த்தது.
நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களும் நான்கு நாட்களாக வெள்ளத்தில் மிதக்கின்றன. 10 பேர் உயிரிழந்து உள்ளனர். வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யும் என தெரிவித்ததே தவிர இப்படி பேய் மழை கொட்டும் என தெரிவிக்கவில்லை. ஆனாலும் மீட்பு பணிகள் அதிதீவிரமாக முன்னெடுக்கப்பட்டு நடந்து வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு சந்தித்து வெள்ளப்பாதிப்பு குறித்து எடுத்துரைத்ததோடு உடனடியாக நிவாரண நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார்.
ஏற்கனவே கேட்டபடி, தற்காலிக நிவாரணமாக (சென்னை வெள்ளத்திற்கு மட்டும்) ரூ.7,033 கோடியும் நிரந்தர நிவாரணமாக ரூ.112,659 கோடியும் வழங்கிடுமாறு பிரமதர் மோடியிடம் வலியுறத்திய அவர், பாதிப்புக்குள்ளாகி வேதனையில் துவளும் தென் மாவட்ட மக்களுக்கு அவசர நிவாரண நிதியாக ரூ.2000 கோடி உடனடியாக ஒதுக்குமாறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேவையான உதவியை வழங்க ஒன்றிய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, வெள்ளப்பாதிப்பில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க தாராளமாக நிதி ஒதுக்க வேண்டும்.
அதுவும் மிக விரைவாக தந்துதவ வேண்டும். கடந்த காலங்களில் இதுபோன்ற பேரிடர் காலங்களில் கேட்டது பெருந்தொகையாகவும் தருவது சொற்பத் தொகையாகவும் இருந்தது நினைவுக்கு வருகிறது.
அதுபோல் அல்லாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டிருக்கும் நியாயமான நிவாரணத்தொகையை முழுமையாக ஒதுக்கி பிரதமர் மோடி தாராளம் காட்ட வேண்டும்.
குடியிருப்புகளை…அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை…கால்நடைகளை…விளை பொருட்களை இழந்து மொத்தத்தில் தங்கள் வாழ்வாதாரத்தையே தொலைத்துத் தவிக்கும் லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களை நோக்கி பிரதமர் மோடியின் கரங்கள் நீளட்டும்.
தமிழ்நாட்டின் ஏழை மக்கள் காத்திருக்கிறார்கள்!