ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தபிறகு, பாஜக அல்லாத ஆட்சி நடக்கும் தென் மாநிலங்கள் கேட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமலும், உரிய நிதியை ஒதுக்காமலும் வஞ்சித்து வருகிறது என்பது எதிர்க்கட்சிகளின் தொடர் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
அண்மையில் கூட மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சில நாட்களிலேயே தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரணம் கேட்டது கேட்ட நிதிக்கு பதிலாக ரூ.5884.49 கோடி (அதாவது வெறும் 4.61 விழுக்காடு) மட்டுமே ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கியது.
எனினும் ஒன்றிய அரசின் நிதிக்கு காத்திருக்காமல், முதல்வர் மு.க.ஸ்டாலினின் சீரிய முயற்சியால் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வை தொடர்ந்து ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு வரிப்பகிர்வை அறிவித்தது. அப்போது தமிழ்நாட்டிற்கு ரூ.2,976.10 கோடி நிதியை வெளியிட்டது. அதாவது 2014 முதல் 2022 வரை ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு ரூ.5.16 லட்சம் கோடி. ஆனால் வரிப் பகிர்வாக நமக்குக் கிடைத்தது வெறும் ரூ.2.08 லட்சம் கோடி.
அதே சமயத்தில் உ.பி.யின் பங்களிப்பு ரூ.2.24 லட்சம் கோடி. ஆனால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது ரூ.9.04 லட்சம் கோடி. உத்தர பிரதேசம், பீகாருக்கு 200% பேரிடர் நிதி வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டிற்கு 64% மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்த சூழலில் நிதி ஆயோக் என்று சொல்லப்படும் நிதி ஆணையத்துடன் பிரதமர் மோடி மாநிலங்களுக்கு தேவையான நிதியை குறைத்து கொடுக்க மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்தி வெளியாகி உள்ளது.
அதாவது 32 சதவிகிதம் வரை நிதியை பெற்றுக் கொண்டிருந்த மாநிலங்களுக்கு, 42 சதவிகிதத்துக்கு உயர்த்தப்பட வேண்டும் என்று நிதி ஆணையம் பரிந்துரைத்திருந்தது.
ஆனால் 2014-ல் பாஜக வெற்றி பெற்று பிரதமராக ஆட்சிக்கு வந்த மோடி இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. 42 சதவிகிதத்திற்கு பதிலாக 33 சதவிகிதம் போதும் என்றார்.
மேலும் அப்போது பட்ஜெட் தாக்கல் செய்யும்போது மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி பகிர்வை குறைக்க வேண்டும் என்று மோடி கூறியதாகவும், ஆனால் இதற்கு நிதி ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியின்றி மோடி தனது முடிவில் இருந்து பின்வாங்கியதாகவும் தெரியவந்துள்ளது.
இதனை எதிர்க்கட்சிகள் கூறவில்லை. தற்போதைய நிதி ஆயோக் தலைமை இயக்குநர் பி.வி.ஆர். சுப்பிரமணியம் தான் இந்த தகவலை பகிர்ந்து அம்பலப்படுத்தி இருக்கிறார்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். தமிழ்நாட்டில் நடந்த இரு பேரிடர்களால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இன்னும் மக்கள் முழுமையாக மீள வில்லை. பேரிடர்களின் பாதிப்புகளை ஒன்றிய அமைச்சர்களும் ஒன்றியக்குழு இருமுறையும் வந்து பார்வையிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
பாதிப்புகள் எத்தனை பெரிது என அவர்கள் நிச்சயம் பிரதமரிடம் சொல்லி இருப்பார்கள். இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி தமிழ்நாட்டு பேரிடர்களுக்கு கூடுதல் நிதியை அறிவிக்க வேண்டும் என்றே இன்னும் தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டு மக்களும் உரிமையோடு எதிர்பார்க்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்களுக்கு பிரதமர் கை கொடுப்பாரா, தமிழில் வணக்கம் மட்டும் கூறி விடைபெறுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!