fbpx
Homeதலையங்கம்ஆளுநருக்கு கடிவாளம் போடுமா உச்சநீதிமன்றம்?

ஆளுநருக்கு கடிவாளம் போடுமா உச்சநீதிமன்றம்?

தமிழ்நாட்டில் இதற்கு முன் தமிழக முதலமைச்சராக இருந்த யாரும் ஆளுநர் மீது வழக்குத் தொடர்ந்ததாக வரலாறு இல்லை. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பி.எஸ்.ராம் மோகன் ராவ் ஆளுநராக இருந்த போது அவருக்கு எதிராக அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த திமுக தான் வழக்குப் போட்டது.

ஆனால் தமிழக அரசே ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்வது இது தான் முதல்முறை. இன்று போல் ஜெயலலிதா -சென்னா ரெட்டி காலத்திலும் கருத்து யுத்தம், வார்த்தைப் போர், நிர்வாகத்தில் இடைஞ்சல் போன்ற நிகழ்வுகள் நடந்தது. இதற்காக ஜெயலலிதா நீதிமன்றத்தை நாடவில்லை. சென்னா ரெட்டியை தனது பாணியிலேயே எதிர்கொண்டார் ஜெயலலிதா.

ஆனால் கடந்த மார்ச் மாதம் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக தெலுங்கானா அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், “மாநிலங்களில் அரசியல் சாசன தலைமை (கவர்னர்) அரசியல் சாசனத்தின் 200ஆவது பிரிவை மனதில் கொள்ள வேண்டும்.

ஒப்புதலுக்காக மசோதாக்கள் அனுப்பப்படுகிறபோது அவற்றைக் கிடப்பில் போடக் கூடாது. தங்களுக்கு ஒப்புதல் இல்லாத மசோதாக்களை சட்டப் பேரவையில் மறு ஆய்வுக்காக ஆளுநர்கள் கூடிய விரைவில் அதற்கான குறிப்புடன் திருப்பி அனுப்பி விட வேண்டும்‘’ என உத்தரவு பிறப்பித்தது.

தெலுங்கானா அரசு ஃபார்முலாவை கையில் எடுத்துள்ள தமிழக அரசு, பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கே அதிகாரம் என்பன உட்பட 13 மசோதாக்களை சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பியும் அதற்கு ஆளுநர் ரவி பல மாதங்களாக ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் கிடப்பில் போட்டிருப்பதாக கூறி உச்சநீதிமன்ற கதவை தட்டியுள்ளது.

மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயம் செய்யக்கோரி தமிழக அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. இவ்விவகாரத்தில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் தமிழக அரசு சுட்டிக் காட்டியுள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஆளுநராக இருந்த பலர் மாநில அரசுடன் வம்பு வழக்கின்றி அனுசரணையான போக்கையே கடைபிடித்திருக்கிறார்கள். ராம் மோகன் ராவ், பாத்திமா பீவி, சுர்ஜித் சிங் பர்னாலா, ரோசைய்யா என இதற்கு பல உதாரணங்களை கூற முடியும்.

ஆனால் அதே வேளையில் சென்னா ரெட்டி, பன்வாரிலால் புரோஹித், ஆர்.என்.ரவி., போன்றோர் அரசின் முடிவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியவர்கள்.

ஆளுநர் அதிகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்ற வாதம் ஒரு பக்கம் இருக்கும் நிலையில் தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

உச்சநீதிமன்றம் என்ன மாதிரி உத்தரவுகளை பிறப்பிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img