fbpx
Homeதலையங்கம்ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை பேச்சால் புண்பட்ட பக்தர்கள்!

ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை பேச்சால் புண்பட்ட பக்தர்கள்!

அரசியல் கட்சித் தலைவர்களும் அரசியல்வாதிகளும் அவ்வப்போது எதையாவது பேச, அது சர்ச்சையாகி விடும். சிலர் திட்டமிட்டே பேசி சர்ச்சையை உருவாக்குவார்கள். இன்னும் சிலர் வாய் குளறி பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள். அப்போதெல்லாம் விதவிதமான விளைவுகளை எதிர்கொள்வார்கள்.

இப்படி பேசுபவர்கள் சிலவேளைகளில் மன்னிப்பு கேட்பார்கள். பாதிக்கப்பட்டவர்கள் எற்றுக் கொண்டால் பிரச்னை அத்தோடு முடிந்து விடும். நடிகை திரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான், அதிமுக மாஜி நிர்வாகி ஒருவர் பேசி சர்ச்சையில் சிக்கி மன்னிப்பு கேட்டார்கள்.

இவை போன்றவற்றை எல்லாம் மக்கள் ரசித்து விட்டு, சிரித்து விட்டு கடந்து போய்விடுவார்கள்.
உச்சபட்மாக மிக உயரிய பதவிகளில் ஒன்றான தமிழ்நாட்டின் ஆளுநர் பதவியில் இருக்கக்கூடிய ஆர்.என்.ரவி அவர்கள் அவ்வப்போது எதையாவது பேசி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதைத் தான் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

காவி உடையில் திருவள்ளுவர் படத்தை அச்சிட்டது, ஜாதி, மத வேறுபாடுகளை களைந்து அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் பாடுபட்ட மகா துறவியான வள்ளலாரை, ஜாதிய படிநிலைகளை தூக்கிப்பிடிக்கும் சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் எனக் கூறியது, அண்ணா பல்கலைக் கழக விழாவில், ‘1947இல் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்ததற்குக் காரணம், நேதாஜிதான். அதற்குக் காரணம், காந்தி இல்லை’ என்று பேசியது…. இப்படி ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சைக்குரிய கருத்தை பலமுறை முன்வைத்திருக்கிறார்.

அப்போதெல்லாம் கண்டனக்கனைகளும் விமர்சனங்களும் அவர் மீது பாயும். இப்போது தென் மாவட்டங்களில் லட்சக்கணக்கானோர் வழிபடும் அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி இருப்பது பெரும் சர்ச்சையாக உருவெடுத்து இருக்கிறது.

தனது கிண்டி மாளிகையில் நடந்த நிகழ்வில், சனாதனத்துக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் ராமர், கிருஷ்ணன், வள்ளலார், அய்யா வைகுண்டர் போன்றோர் அவதாரங்களை எடுத்துள்ளனர். அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்துக்கு புத்துயிரூட்டி பெரிதும் வளப்படுத்தினார் என்றும், சனாதன தர்மத்தை அதை அழிக்க சதி செய்தவர்களிடம் இருந்து பாதுகாப்பதில் அய்யா வைகுண்டர் ஆழமான பங்களிப்பை வழங்கினார் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

இந்து மதத்தில் நிலவும் சாதிய கொடுமைகளுக்கு எதிராக அய்யா வைகுண்டர் வெகுண்டு எழுந்து போராடிய நிலையில், சனாதன தர்மத்தை அவர் பாதுகாத்ததாக ஆளுநர் பேசியது சர்ச்சையை உண்டாக்கியது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் அய்யா வைகுண்டர் தலைமைப் பதி அடிகளார் பாலபிரஜாபதி ஆளுநர் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், “அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவது போல் வரலாற்றை திரித்து ஆளுநர் பேசியுள்ளார். அய்யா வைகுண்டர் மனு தர்மத்திற்கு எதிராக போர்க்குரல் கொடுத்தார்.

மனு தர்மத்தை ஏற்றிருந்த அரசுதான் அய்யாவை கொடுமைப்படுத்தியது, சிறைப்படுத்தியது. உருவ வழிபாடு, மொழி பேதம், ஆண் – பெண் பேதம், சாதி பேதம் இல்லை என பல கோட்பாடுகளை கூறியவர் அய்யா வைகுண்டர்.

அய்யா வைகுண்டர் குறித்த வரலாற்றை ஆளுநர் புரிந்து பேச வேண்டும். வரலாறு தெரியாமல் அய்யா வைகுண்டர் சனாதானத்தை ஆதரித்ததாக தவறான தகவல்களை தெரிவித்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது` என பதிலடி கொடுத்துள்ளார்.

தாழ்த்தப்பட்ட பெண்கள் மார்பகத்தை சேலையால் மறைக்கக் கூடாது என சட்டம் போட்ட மனுதர்ம சக்கரவர்த்தியை எதிர்த்து போராடியவர் அய்யா வைகுண்டர். அவர் எப்படி மனுதர்ம சனாதானத்தை ஆதரித்திருப்பார்?

வைகுண்டரின் வழிவந்த பாலபிரஜாபதி அடிகளாருக்கு ஆளுநர் பதில் சொல்வாரா, மாட்டாரா என்பது வேறு விஷயம். இதுபோன்று சர்ச்சையாக பேசி, சிறந்த வழிபாட்டு முறைகளைக் கொண்டுள்ள அய்யா வைகுண்டரின் பக்தர்களின் மனதைப் புண்படுத்தி இருக்கிறார் என்பது வேதனை தரும் விஷயமாகத்தான் பார்க்கப்படுகிறது.

உணர்வுபூர்வமான ஆன்மிகப் பணிகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி மிகமிக எச்சரிக்கையாக பேச வேண்டியது அவசியம். ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்மிகப் பணிகளைத் தவிர்த்து விட்டு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நல்ல ஆலோசனைகள் கூறலாம். யாராக இருந்தாலும் சர்ச்சைக்கு இடம்தராமல் தனக்குரிய வேலையை செவ்வனே செய்வது தானே சிறப்பு!

படிக்க வேண்டும்

spot_img