தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்று சொல்லப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு தமிழ்நாட்டில் நடைபெறும். இந்த போட்டித்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாட்டின் அரசுத் துறைகளுக்கு தேவையான ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
14 உறுப்பினர்களை கொண்ட இந்த தேர்வாணையத்தில் தலைவர் பதவி நியமிக்கப்படாமல் காலியாக உள்ளது. எனவே இதனை சரிசெய்ய TNPSC தலைவர் பதவியை நிரப்ப வேண்டும் என்ற நோக்கில், தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற காவல் அதிகாரி டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை தேர்வு செய்தது.
பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலை பெறுவதற்காக பரிந்துரை கடிதமானது கடந்த ஆகஸ்ட் மாதம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதனை ஆளுநர் ஆர்.என்.ரவியோ, திருப்பி அனுப்பி விட்டார்.
இதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் பிற அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்து வலுத்த கண்டனங்கள் எழுந்தது. தொடர்ந்து ஆளுநரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் எழுந்து வந்த நிலையில், இந்த தேர்ந்தெடுப்பு எதனடிப்படையில் நடைபெற்றது என்று விளக்கம் கேட்டு ஆளுநர் மாளிகை தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநருக்கு விளக்க கடிதமும் அனுப்பப்பட்டது. அதில் அனைத்து விளக்கமும் தெளிவாக குறிப்பிட்டு தமிழ்நாடு அரசு அனுப்பியிருந்தது.
இந்த சூழலில் தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் முன்னாள் டி.ஜி.பி சைலேந்திர பாபு நியமனத்தை நிராகரித்துள்ளார். இந்த நிலையில் தற்போதும் ஆளுநர் ரவியின் இந்த செயலுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.
சைலேந்திரபாபு நேர்மையாகப் பணியாற்றி தமிழ்நாட்டு மக்கள் மனதில் இடம்பிடித்தவர். தமிழ்நாடு அரசு தேர்வாணயத்திற்கு ஒரு நேர்மையானவர் தலைவராக வந்தால் அதன் நிர்வாகம் சிறப்பாக இருக்கும் என தமிழ்நாடு அரசு விரும்புகிறது. மக்களும் விரும்புகிறார்கள்.
ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி மட்டும் விரும்பவில்லை. எதற்கெடுத்தாலும் தமிழ்நாடு அரசை எதிர்ப்பது மட்டும் அவரது கொள்கையாக இருக்கிறது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
சைலேந்திர பாபு அவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தலைவராகும் தகுதி இல்லை என்று தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் ரவி நிராகரித்திருப்பது அவரது அதிகார எல்லையை மீறிய தான்தோன்றித்தனமான சர்வாதிகார முடிவாகும்.
தமிழக அரசு செய்கின்ற பரிந்துரைகளை எல்லாம் நிராகரிக்கும் ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏஜெண்டாகச் செயல்படுகிறார்
என்று வைகோ கண்டித்து இருக்கிறார்.
தமிழ்நாட்டின் சுதந்திரப்போராட்டத் தியாகியும் தன்னலமற்ற பணியாற்றி 100 வயதைத் தாண்டிய முதுபெரும் தலைவருமான சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் தருவதற்கு கூட அவர் ஒப்புதல் தரவில்லை. இதைவிட மோசமான அணுகுமுறை எதுவும் இருக்காது.
திமுகவை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இப்படியெல்லாம் அவர் விதிகளை மீறி, மரபுகளை மீறி கோப்புகளை எல்லாம் குப்பைத் தொட்டியில் போடாத குறையாக ராஜ்பவனில் ஓரம் கட்டியிருக்கிறார்.
தமிழ்நாட்டு மக்கள் நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்டவர் என்றால் ஆளுநர் பதவியை துறந்து விட்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலாவது போட்டியிட ஆர்.என்.ரவியால் முடியுமா? வெற்றி பெற முடியுமா? இது தான் தமிழ்நாட்டு மக்களின் விஸ்வரூப கேள்வி.
தமிழ்நாட்டு மக்கள் தங்கள் மனங்களில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை ஓரங்கட்டவில்லை – வெளியே தூக்கி எறிந்து வெகுநாளாகி விட்டது!