2024 நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு அடிப்படையில் பார்த்தால் திமுக பெரும்பாலும் தற்போதைய எம்பிக்கள் + புதியவர்கள் என்று களமிறக்கி உள்ளது. அதிமுக பெரும்பாலும் கட்சியின் புதுமுகங்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.
பாஜகவோ கட்சியின் பெரிய டாப் தலைவர்கள் அல்லது மிகவும் பிரபலமானவர்கள் எல்லோரையும் களமிறக்கிவிட்டது. எச்.ராஜா தவிர கட்சியின் பிரபல முகங்கள் எல்லோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு விட்டனர்.
இதில் தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநர், துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தென் சென்னையில் போட்டிக்கு இறங்கி உள்ளார். அதேபோல் இன்னொரு பக்கம் ராஜ்ய சபா எம்பியாக இருந்தும், மத்திய இணை அமைச்சராக இருந்தும் கூட எல்.முருகன் நீலகிரி வேட்பாளர் ஆகி உள்ளார்.
நயினார் நாகேந்திரன் பாஜகவின் தமிழக சட்டப்பேரவை பாஜக தலைவராக இருந்தும் கூட நெல்லை வேட்பாளர் ஆகி உள்ளார். மேலும் திமுக சின்னத்தில் எம்பியான பாரிவேந்தர் (இ.ஜ.க) பெரம்பலூரில் பாஜக சார்பாக நிற்கிறார்.
தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்ற அண்ணாமலை கோவையில் நேரடியாக களமிறங்கி உள்ளார். இது போக சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்து இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில் விருதுநகரில் ராதிகா சரத்குமார் களமிறக்கப்பட்டு உள்ளார். ஏ.சி.சண்முகம் வேலூரில் போட்டியிடுகிறார்.
அதுமட்டுமா, பொன் ராதாகிருஷ்ணன், கே.பி.ராமலிங்கம், ஜான் பாண்டியன்… இப்படி வெளியாகி இருக்கும் வேட்பாளர்கள் பட்டியல் வியப்பு கலந்த அதிர்ச்சியைத் தருவதாகவே இருக்கிறது.
இப்படி தமிழ்நாட்டில் பாஜக சார்பாக நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக்கியமான வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். பாஜகவின் இந்த தீவிர வேட்பாளர் தேர்வு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதுவெல்லாம் எதைக் காட்டுகிறது? எப்படியாவது தமிழ்நாட்டில் காலூன்றி விட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் பாஜக தனது தேர்தல் பணியை தொடங்கி உள்ளது.
தேர்தலில் வடக்கில் பாஜக எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் வெற்றி கிடைக்காத பட்சத்தில் தமிழ்நாட்டில் ஒன்றிரண்டு இடம் கிடைத்தால் கூட அது அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும். அதை மனதில் வைத்தே பாஜக இங்கே இந்த முறை டாப் வேட்பாளர்களை இறக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி நாலைந்து முறை தமிழ்நாட்டுக்கு வந்து சென்று விட்டார். தமிழ்நாடு மீது பாஜக ஸ்பெஷல் கவனம் செலுத்தி வருவதையே இது காட்டுகிறது.
சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய ஜனநாயகத்தைக் காக்கும் அதிரடி தீர்ப்புகளை (தேர்தல் பத்திரம், அமைச்சர் பொன்முடி வழக்குகள்) நாம் அறிவோம். ஆனால் மக்கள் மன்றம் (வாக்காளர்கள்) அளிக்கப்போகும் தீர்ப்புகளை நாம் இப்போதே அறிய முடியாது.
தேர்தல் நடக்கட்டும் – ஜூன் 4 வரை காத்திருப்போம்!