பீகாரில் அனைத்து கட்சிகளின் ஒப்புதலுடன் ஜாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது தொடர்பான மசோதாவுக்கு பீகார் சட்டப்பேரவையில் நவம்பர் 9 ஆம் தேதியும், சட்ட மேலவையில் நவம்பர் 10 ஆம் தேதியும் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அவற்றை, சட்டப்பேரவை செயலகம், ஆளுநருக்கு கடந்த நவம்பர் 12 ஆம் தேதி அனுப்பியது. உச்சநீதிமன்றத்தின் இடித்துரையைத் தொடர்ந்தோ என்னவோ, இடஒதுக்கீடு மசோதாக்களில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் நவம்பர் 18ஆம் தேதி ஒப்புதல் கொடுத்து கையெழுத்திட்டார். அதன் நகல் நேற்று முன்தினம் (21ம் தேதி) மாநில அரசுக்கு கிடைத்தது.
தற்போது அனைத்து வகுப்பினரின் நிலையை கருத்தில்கொண்டு, இடஒதுக்கீடு வரம்பு 75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மசோதா இரு அவைகளிலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
சமூகத்தின் ஒவ்வொரு குடிமகன் மற்றும் குடும்பத்தின் பொருளாதார நிலை மதிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்படி, பீகார் மாநிலத்தில் 94 லட்சம் ஏழைக் குடும்பங்கள் மாத வருமானம் ஆறாயிரம் ரூபாய் வரை மட்டுமே உள்ளன.
அத்தகைய குடும்பங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஒரு குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கவும் நிலமற்ற குடும்பங்களுக்கு வீடு கட்ட நிலம் வாங்க ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் நிதிஷ்குமார் முடிவு செய்தார். இதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தத் திட்டத்திற்காக ரூ.2.5 லட்சம் கோடி செலவிடப்படும். புதிய முறையில் 75 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. அதாவது ஏற்கெனவே வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டில் 15 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது. 13 சதவீதம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கப் பட்டனர்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அரசின் முற்போக்கான இந்த நடவடிக்கை ஒரு சமூகப் புரட்சியாகவே பார்க்கப்படுகிறது. மேலும் தேசிய அரசியல் அரங்கில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அம்மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேகரும் மசோதாவில் கையெழுத்திட்டு வழி ஏற்படுத்தி தந்திருக்கிறார். அதேபோல தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் மாநில அரசின் மசோதாக்களுக்கு தடையின்றி ஒப்பதல் தந்தால் தமிழ்நாட்டிலும் சமூகப் புரட்சி நடந்தேறும் என்பதில் ஐயமில்லை!