திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் ரோட்டரி சங்கம் மற்றும் பொது மக்கள் பங்களிப்புடன் ரூ.90 கோடி மதிப்பில் புற்றுநோய் மருத்துவமனை கட்டடம் கட்டும் பணி துவக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ க.செல்வராஜ், மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், திருப்பூர் ரோட்டரி பொது நல அறக்கட்டளை தலைவர் ஆ.முருகநாதன், ஆயத்த ஆடை மேட் அப்ஸ் மற்றும் வீட்டு அலங்காரம் துறை திறன் கவுன்சில் தலைவரும், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க கௌரவத்தலைவருமான ஆ.சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் புற்றுநோய் மருத்துவமனை கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தனர்.
விழாவில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், ‘’புதிதாக கட்டப்பட உள்ள மருத்துவமனையில் கதிர்வீச்சு புற்றுநோயியல் பிரிவு, ஐம்ஆர்டி, ஐஜி ஆர்டி, ஹெச்.டி.ஆர் உள் கதிர்வீச்சு மருத்துவம், மருத்துவ புற்றுநோயியல் பிரிவு, அறுவை சிகிச்சை புற்றுநோயியல் பிரிவு, அணு மருத்துவம் முழு உடல் பெட் சிடி ஸ்கேன், இருதய மருத்துவ கேத் லேப் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் அமைய உள் ளது.
இத்திட்ட செலவில் ரூ.60 கோடி தமிழக அரசின் பங்காகும். மீதி நிதியுதவியை வழங்கிய திருப்பூர் ரோட்டரி சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், செஞ்சிலுவை சங்கம், லயன்ஸ் அமைப்புகள், தொழில் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
முன்னதாக திருப்பூர் மாநகராட்சி, வார்டு 56க்கு உட்பட்ட சந்திராபுரத்தில் சங்க இலக்கிய பூங்கா இடத்தில் மரக்கன்று நடும் பணியினை அமைச்சர் மு.பெ.சாமிநாதான் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன், திருப்பூர் ரோட்டரி பொதுநல அறக்கட்டளை துணை தலைவர் அ.கார்த்திகேயன், வெற்றி அறக்கட்டளை தலைவர் கோபலகிருஷ்ணன், செயலாளர் சிவராமன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் நாராயணசாமி, இளங்குமரன், சுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.