சட்டமன்ற நாயகர் கலைஞரின் சாதனை அளப்பரியது என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசினார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பல்லடம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ‘சட்டமன்ற நாயகர் கலைஞர்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.
திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ க.செல்வராஜ் முன்னிலை வகித்தார். ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், அரசு தலைமை கொறடா கோவி.செழி யன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பேசியதாவது:
மக்களின் தேவையை அறிந்து அதற்கான திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர். கல்விக் கொள்கை கொண்டு வந்து கல்வியில் சமுதாய மாற்றத்தை கொண்டு வந்தார்.
இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு பட்டியலினத்தவருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அனைத்து சமூகத்திலும் அடித்தட்டு மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு பெற உறுதி செய்தார்.
சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றியதில் அவரது சாதனை அளப்பரியது. கை ரிக்சா ஒழிப்புத் திட்டம், பிச்சைக்காரர்கள் மறு வாழ்வுத்திட்டம், அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், கலை அறிவியல் கல்லூரிகள், பல பல்கலைக்கழகங்கள் எனப் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர் கலைஞர் என்றார்.
அரசு தலைமை கொறடா கோவி.செழியன் பேசுகையில், “கலைஞர் 62 ஆண்டுகள் சட்ட மன்றப் பணி, 50 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் தலைவர் பணி, 5 முறை முதலமைச்சர் பணி, 13 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்த கலைஞரின் சாதனைகள் எண்ணிலடங்காதது.
நீர்ப்பாசனம், மின்சாரம், வேளாண்மை, தொழிலாளர் நலன், நிலச் சீர்த்திருத்தம் ஆகிய துறைகளில் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தியதால் தமிழ்நாடு உணவு தானிய உற்பத்தியில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது” என்றார்.