பாராளுமன்ற பொதுத்தேர்தல் குறித்த அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப் பட்டது. பொதுத்தேர்தல் தமிழகத்தில் 19.04.2024 அன்று நடை பெறவுள்ளதையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை வலி யுறுத்தும் வகையில் நாள்தோறும் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அதில் திருப்பூர் மாநகராட்சி, எல்.ஆர்.ஜி. மகளிர் அரசு கலைக் கல்லூரியில் நாடாளுமன்றப் பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, வாக்காளர் உறுதிமொழி கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மூத்தக்குடிமக்களுக்கு வீட்டிலிருந்தவாறு தபால் மூலம் வாக்களிப்பதற்கான 12-டி படிவங்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, 26.03.2024 அன்று மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் கலந்து கொண்ட வழிப்புணர்வு பேரணி தொடங்கி வைத்தார்கள். மேலும், தேர்தல் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை பயணிகள் ஆட்டோக்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், செய்தி மக்கள் தொடர் புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் தேர்தலில் 100 சதவீதம் வாக் களிப்பதன் அவசியம் குறித்து குறுபடம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் நாள்தோறும் பொதுமக்கள் பார்வைக்கு காட்சி படுத்தப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, 29.03.2024 அன்று திருப்பூர் மாநகராட்சி கலைஞர் கருணா நிதி பேருந்து நிலையத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது. தொடர்ந்து, 30.03.2024 அன்று திருப்பூர் மாநகராட்சி, முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து அரசுப்பேருந்துகளில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டுவில்லையை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த மாதம் 1ம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது நம் அனைவரின் ஜனநாயக கடமை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மூன்றாம் பாலினத்தார் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து, 8ம் தேதி திருப்பூர் மாநகராட்சி, சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் பொதுத் தேர்தலில் 100% வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக் குழு சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைக்கப்பட்டது.
இவைகளைத் தொடர்ந்து, நேற்று மாவட்ட தேர்தல் அலுவலர் கிறிஸ்துராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட சமூகநல அலுவலர் ரஞ்சிதாதேவி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ், தொடர்புடைய தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.