தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநர் சஞ்சய் குமார், சென்னை சைபர் கிரைம் பிரிவு காவல் கண்காணிப்பாளர், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உத்தரவின்பேரில் திருப்பூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி அறிவு ரைப்படி திருப்பூர் மாவட்ட காவல் ஆய்வாளர் தலைமையில் இணைய வழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இதில் சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் என சுமார் 350 பேர் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியில் இணையவழி குற்றங்கள் குறித்தும், செல்போன் பயன்படுத்துவதினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்தும், ஓடிபி தொடர்பான குற்றங்கள் குறித்தும், சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்கள் , போலியான கடன் செயலிகள், போலி வேலை வாய்ப்பு குற்றங்கள், வங்கி கணக்குகளில் நடைபெறும் மோசடிகள், முக்கியமாக பட்டதாரி இளைஞர்களை குறி வைக்கும் பகுதிநேர வேலைவாய்ப்பு ஆகியவை குறித்த விழிப்புணர்வு பதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்தி வந்தனர்.
சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருந்து பேரணியாகப் புறப்பட்டுச் சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், பொதுமக்களுக்கு சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in இணையதள முகவரியும் தெரிவிக்கபட்டது.