திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அருணாச்சலம் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி பொதுமக்களை திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. திருப்பூர் ஒன்றிய கழகச் செயலாளருமான கே.என்.விஜயகுமாருடன் நேரில் சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது ஒன்றிய தலைவர் சொர்ணம்பாள் பழனிச்சாமி, மாவட்ட கவுன்சிலர்கள் வேல்குமார் சாமிநாதன், கண்ணம்மாள் ராமசாமி, முன்னாள் தலைவர் தங்கராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வரிய மகராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் பூலுவப்பட்டி பாலு, ஆகியோருடன் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம், சிவசக்தி நகர், சொக்கனூர், கணக்கம்பாளையம் ஊராட்சி, காளிபாளையம் ஊராட்சி பொங்குபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிக ளில் வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருமாநல்லூர் சாலையில் போக்குவரத்து நெரிசலை நிரந்தரமாக போக்கும் வகையில் தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்த ரூ.900 கோடி மதிப்பீட்டில் பாண்டியன்நகர் முதல் புஷ்பா தியேட்டர் வரை புதிய மேம்பாலம் அமைக்க பாடுபடுவேன்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் அ.தி.மு.க. வழங்கி வந்த மக்கள் நலத்திட்டங்களை முடக் கியதுடன், மின் கட்டணம், பால் விலை, பஸ் கட்டணம், சொத்துவரி போன்றவற்றை உயர்த்தி உள்ளது. சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் மக்களின் வலிகளையும், கஷ்ட, நஷ்டங்களையும் நன்கு அறிவேன்.
எனவே தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப அடித்தளம் அமைக்கும் வகையில் இரட்டை இலை சின்னத்தில் இப்பகுதி மக்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், எஸ்.டி.பி.ஐ., தே.மு. தி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக வேட்பாளர் அருணாச்சலம் மற்றும் எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமாருக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.