தாட்கோ பொருளாதார மேம்பாட்டு திட்டங்களின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 265 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.1372.49 கோடி மதிப்பில் ரூ.339.38 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றபின் தாட்கோ துறையில் பல்வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
தாட்கோ மூலம் மகளிர் வேளாண் நிலம் வாங்கும் திட்டம், தொழில்முனைவோர் திட்டம், இளைஞர் சுயவேலைவாய்ப்பு திட்டம், விவசாய நிலத்திற்கு விரைந்து மின் இணைப்பு பெறும் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்கும் திட்டம், சுயஉதவி குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் மூலம் இந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட வழிவகை செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ் தெரிவித்ததாவது:
தாட்கோ பொருளாதார மேம்பாட்டு திட்டங்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு மொத்த அலகு தொகையில் 30% அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் இதில் எது குறைவாக உள்ளதோ அந்த தொகை மானியமாக வழங்கப்படுகிறது.
அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 265 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.1372.49 கோடி மதிப்பில் ரூ.339.38 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில் விண்ணப்பம் பதிவு செய்வதற்கு, விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், விண்ணப்பதாரரின் சாதிச்சான்று, குடும்ப ஆண்டு வருமான சான்று (சமீபத்தில் எடுக்கப்பட்டதாகவும், ரூ.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்), குடும்ப அட்டை, ஆதார் அட்டை, கோரும் தொழிலுக்கான விலைப்புள்ளி (கால்நடைகளாக இருப்பின் கால்நடை மருத்துவரின் மதிப்பீட்டு அறிக்கை), திட்ட அறிக்கை, வாகனக் கடன் கோருபவர் எனில் வட்டாரப் போக்குவரத்து அலுவலரால் வழங்கப்பட்ட பேட்ஜ் உடன் கூடிய ஓட்டுநர் உரிமம், குழுக்கள் எனில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் வரிசை எண்.1 முதல் 6 வரையிலான ஆவணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
தவிர கோரும் தொழிலுக்கான விலைப்புள்ளி (கால்நடைகளாக இருப்பின் கால்நடை மருத்துவரின் அறிக்கை), பொருளாதார கடனுதவி எனில், தரம் பிரிக்கப்பட்ட சான்றும், வங்கி சேமிப்பு கணக்கு, கடன்கோரி குழுவால் இயற்றப்பட்ட தீர்மான நகல் ஆகியன இணைக்கப்பட வேண்டும் (குழு உறுப்பினர் அனைவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை இருக்கலாம்).
எனவே இந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும், விருப்பம் உள்ள பயனாளிகள் தங்கள் விண்ணப்பங்களை தாட்கோ இணையதளத்தில் ஆதிதிராவிடர்களுக்கு http://application.tahdco.com/ என்ற முகவரியிலும், பழங்குடியினர்களுக்கு http://fast.tahdco.com/ என்ற முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டங்கள் தொடர்பாக விளக்கங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ மாவட்டஆட்சியர் அலுவலக 3-வது தளம், கோரம்பள்ளம், தூத்துக்குடி 628101 என்ற முகவரியில் அணுகியும், அலைபேசி எண் 9445029532 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்றார் ஆட்சியர்.
‘டிராக்டர் வாங்கினேன்
எளிதாகியது விவசாயம்’
இத்திட்டத்தில் பயனடைந்த ஒட்டப்பிடாரம் வட்டத்திற்கு உட்பட்ட வடக்கு ஆரைக்குளம் பகுதியைச் சேர்ந்த சுடலைமணி தெரிவித்ததாவது:
விவசாயம் செய்து வருகிறேன்.
சொந்தமாக டிராக்டர் வாங்குவதற்கு வசதி இல்லாததால் வாடகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தேன். பின்னர் தாட்கோ மூலம் தொழில் செய்வதற்கு மானியம் வழங்குவதை அறிந்து விண்ணப்பித்தேன். தாட்கோவில் 7 நாள் பயிற்சி கொடுக்கப்பட்டது. இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
தற்போது தாட்கோ மூலம் ரூ.2.25 லட்சம் மானியத்தில் டிராக்டர் வாங்கி விவசாயம் செய்து வருகிறேன். இப்போது விவசாயம் செய்வதற்கு எளிதாக உள்ளது. இதன்மூலம் வருமானம் பெருக வழி கிடைத்துள்ளது. இத்திட்டத்தை வழங்கிய முதல்வருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
‘மாத வருமானம் அதிகரிப்பு’
கோவில்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட வடக்கு மந்தித்தோப்பு மணிமேகலை கூறியதாவது:கூலி வேலை செய்து வந்தேன். தாட்கோ மூலமாக தொழில் செய்வதற்கு மானியம் வழங்குவதை அறிந்து விண்ணப்பித்தேன். எனக்கு தாட்கோவில் ரூ.56,700 மானியம் வழங்கப்பட்டதில், 10 ஆடுகள் வாங்கி தொழில் செய்கிறேன்.
தற்போது என்னிடம் 20 ஆடுகளாக பெருகிவிட்டன. இதன்மூலம் மாத வருமானம் பெருக வழி கிடைத்துள்ளது. இத்திட்டத்தை வழங்கிய முதல்வருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
‘முன்னோடி தொழில் முனைவரானோம்’
வடக்கு சிலுக்கன்பட்டி, கீழ்தட்டப்பாறையைச் சேர்ந்த சுப்புலெட்சுமி, பிச்சைக்கனி, தங்கமாரி, அல்லி, மகராசி, சுவேதா, லெட்சுமி ஆகியோர் தெரிவித்ததாவது:
நாங்கள் வேலை இல்லாமல் வருமானத்திற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தோம். தாட்கோ மூலமாக தொழில் செய்வதற்கு மானியம் வழங்குவதை அறிந்து விண்ணப்பித்தோம்.
எங்களுக்கு தலா ஒருவருக்கு ரூ.45 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3.15 லட்சம் மானியமாக வழங்கப்பட்டது. ஆடுகள், மாடுகள் வாங்கி தொழில் செய்து வருகிறோம். தற்போது எங்களிடம் ஆடுகள், மாடுகள் இரண்டு மடங்காக பெருகி உள்ளன.
இதன்மூலம் மாத வருமானம் பெருக வழிகிடைத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் நாங்கள் முன்னோடி தொழில்முனைவோராகத் திகழ்வதால் எங்களிடம் ஆடு மற்றும் மாடுகள் வளர்ப்பு மற்றும் விற்பனை பற்றிய ஆலோசனைகளை பலர் பெற்றுச் செல்கின்றனர்.
இத்திட்டத்தை வழங்கிய முதல்வருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் மிக்க நன்றி என்றனர்.
‘சொந்த வாகனத்தால் மகிழ்ச்சி’
ஒட்டப்பிடாரம் வட்டம் புதுப்பச்சேரி, ஜம்புலிங்கபுரம் இளையரசன் தெரிவித்ததாவது: மிகக் குறைந்த வருமானத்தில் வாடகைக்கு வாகனம் எடுத்து தொழில் செய்து கொண்டிருந்தேன்.
பின்னர் தாட்கோ மூலமாக வாகனம் வாங்கி தொழில் செய்வதற்கு மானியம் வழங்குவதை அறிந்து விண்ணப்பித்தேன். தாட்கோவில் ரூ.2.25 லட்சம் மானியம் வழங்கப்பட்டது. டூரிஸ்ட் வாகனம் வாங்கி தொழில் செய்து வருகிறேன். இதன்மூலம் மாத வருமானம் பெருகி உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் சொந்த வாகனம் வைத்து தொழில் செய்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இத்திட்டத்தை வழங்கிய முதல்வருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி என்றார்.
‘இலவச மின் இணைப்பால்
அதிக பயனடைந்தேன்’
விவசாய நிலத்திற்கு விரைந்து மின் இணைப்பு பெறும் திட்டத்தின் மூலம் மின் இணைப்பு பெற்று பயனடைந்த கோவில்பட்டி வட்டம் காளாம்பட்டி நாச்சியார்புரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கூறியதாவது:
விவசாயியாகிய எனக்கு நிலத்தில் மின் இணைப்பு இல்லாமல் கஷ்டப்பட்டேன். தாட்கோ மூலமாக மின் இணைப்பு பெறும் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அறிந்து விண்ணப்பித்தேன்.
முதுநிலை வரிசைப்படி எனக்கு மின் இணைப்பு கிடைத்துள்ளது. இதனால் விவசாயம் செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தற்போது விவசாயத்தில் நிறைய வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது. இத்திட்டத்தை வழங்கிய முதல்வருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி என்றார்.
தொகுப்பு:
சே.ரா.நவீன்பாண்டியன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
எஸ்.செல்வலெட் சுஷ்மா,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
தூத்துக்குடி மாவட்டம்.