தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு, 1921ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இது 552 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலம் நாட் டின் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது.
இந்நிலையில் நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில், தணிக்கை செய்யப்பட்ட காலாண்டு மற்றும் 31.03.2024 அன்று நிறைவு பெறும் நிதி ஆண்டின் நிதி நிலை முடிவுகள், அங்கீகரிக்கப்பட்டது. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: மொத்த வர்த்தகம் ரூ.85,348 கோடியிலிருந்து ரூ.89,485 கோடியாக அதிகரித்துள்ளது. CASA ரூ.13,736 கோடியிலிருந்து ரூ.14,676 கோடியாக அதிகரித்துள்ளது.
நிகர லாபம் ரூ.1,029 கோடியிலிருந்து ரூ.1,072 கோடியாக உயர்ந்துள்ளது. வட்டி வருமானம் ரூ.4,081 கோடியிலிருந்து ரூ.4,848 கோடியாக மேம்பட்டுள்ளது. மொத்த வருமானம் ரூ.4,710 கோடியிலிருந்து ரூ.5,493 கோடியாக உயர்ந்துள்ளது. இப்படி பல்வேறு தகவல்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.