2016ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார்.
அதில், தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்று பணியில் அமர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியில் இருந்து 2 ஆண்டுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்டம், திருத்தம் செய்யப்பட்டு அரசுப் பணிக்காக நடத்தப்படும் தேர்வில் தமிழில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த திருத்தம், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குறுகிய காலத்தில் தமிழைக் கற்றுத் தேர்ச்சியாகி பணியில் சேர வாய்ப்புள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் அச்சம் தெரிவித்தார்.
தமிழர்கள் மட்டுமே தேர்வெழுதும் வகையில் இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதே கருத்தை பாமக, விசிக உறுப்பினர்களும் எதிரொலித்தனர். இதுகுறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதி அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு சட்டம் ஒருமனதாக நிறைவேறியது.
இந்த சட்டதிருத்தம் வரவேற்கக் கூடியதே. தமிழ்நாடு அரசுப் பணிகளில் தமிழர்கள் மட்டுமே இடம் பெறும் வகையில் சட்டம் திருத்தப்பட வேண்டும். அந்நாளே பொன்னாளாக இருக்கும்.
அந்த நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் மலரச் செய்வார் என்பதில் சந்தேகமில்லை!