இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் குறித்து உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்துகளை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, குறுகிய கால பதவி காலத்துடன் தலைமை தேர்தல் ஆணையர்கள் நியமிப்பதில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. 2004ஆம் ஆண்டுக்கு பிறகு வந்த அரசுகள், தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை அழித்துவிட்டதாக சரமாரியாக குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தது.
தேர்தல் ஆணையர்களை நியமிப்பதில் சீர்திருத்தங்களை கொண்டு வரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
மத்திய அரசின் செயலாளராக பதவி வகித்த அருண் கோயல் கடந்த 18-ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். அடுத்த நாளே அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான ஆவணங்களை பார்க்க விரும்புவதாகவும் அதனை சமர்ப்பிக்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விசாரணையின்போது உச்ச நீதிமன்றம், டி.என். சேஷனை நினைவுகூர்ந்தது பெரும் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.
“எத்தனையோ தலைமை தேர்தல் ஆணையர்கள் வந்து சென்றுவிட்டனர். ஆனால் டி.என். சேஷனை போல நெஞ்சுரம் மிக்க ஒரு அதிகாரி இதுவரை வரவில்லையே..” என உச்ச நீதிமன்றம் கூறும் அளவுக்கு அவர் அப்படி என்ன சாதித்துவிட்டார்?
ஆனால், மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் திருவிழா போல கொண்டாடப்படுவதற்கும், தேர்தல் நடைமுறைகளில் நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதற்கும் டி.என். சேஷன் எடுத்த அதிரடி நடவடிக்கைகளே காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.
இறந்து 3 வருடங்களாகியும் கூட இன்று வரை டி.என். சேஷன் என்ற பெயர் நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்துவது என்பது சாதாரண விஷயமா? டி.என்.சேஷன், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக 1990-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
அதுவரை வெளி உலகுக்கும் தெரியாமல் இருந்த சேஷனின் ஆளுமை, அவர் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்கு வந்த பிறகுதான் அனைவருக்கும் தெரியவந்தது.
அவர் அந்தப் பதவியில் இருந்த 6 ஆண்டு காலமும், இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். அரசியல் சாசனம் சுதந்திரமாக செயல்பட அதிகாரம் வழங்கிய போதிலும், மத்திய அரசின் கைப்பாவையாகவே இந்தியத் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வந்தது. அந்த தலையெழுத்தை மாற்றி எழுதியவர் டி.என். சேஷன்.
வாக்காளர்களை விலைக்கு வாங்குவது, மிரட்டுவது உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார். இதை மீறும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்தார்.
தேர்தலின் போது மது விநியோகிக்கப்படுவது, அரசு வாகனங்களை பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவது, ஜாதி, மத ரீதியிலான பிரச்சாரங்களை மேற்கொள்வது என அனைத்து அராஜகங்களுக்கும் கடிவாளம் இட்டார் சேஷன்.
சேஷனின் மன உறுதியும், அவருக்கு பயம் என்ற உணர்வே இல்லை என்பதும் அரசியல்வாதிகளுக்கு புரிந்தது. எவருக்காகவும் சேஷன் வளைந்து கொடுக்கவில்லை. அதனால்தான், இறந்த பின்னரும் இன்று வரை அவர் நினைவுகூரப்படுகிறார்.
இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் டி.என். சேஷன். தற்போதும் இனிவருங்காலங்களிலும் தலைமை தேர்தல் ஆணையர்களாக இருக்கப் போகிறவர்களும் டி.என்.சேஷனை மாடலாக ஏற்றுக் கொண்டு பணியாற்றி ஜனநாயகத்தின் மாண்பை நிலை நிறுத்த வேண்டும்.
டி.என்.சேஷனை நினைவுபடுத்தும் வகையில் செயல்படுவார்களா? அப்படி இருக்க வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு. அது தான் இந்தியாவின் ஜனநாயகத்துக்கு நல்லது.