தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உணவு குழாய் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்
தேனி மாவட்டம், மேலக்கூடலூர் பகுதியை சேர்ந்த மதுரை வீரன் என்பவரின் மனைவி அமராவதி(45). கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்த இவர் கடந்த 3 மாதங்களாக சரிவர சாப்பிடாமல் இருந்ததால், உடல் எடை இழப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது, உணவுக் குழாயில் சதை வளர்த்து அடைப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து உணவுக் குழாயில் உள்ள சதையின் சிறுபகுதியை எடுத்து சோதனை செய்ததில் அந்த கட்டி புற்று நோய் என்பது தெரியவந்தது. இதனையடுத்து இந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலசங்கர் தலைமையில் மருத்துவர்கள் ஆலோசனை செய்தனர். ஆலோசனையின் முடிவில் உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு அந்த பெண்ணின் உடலை தயார்படுத்தும் விதமாக அவரின் மூக்கு வழியாக சிறு குழாய் ஒன்றை சிறுகுடலுக்குள் செலுத்தி உணவு அளிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு உடல்நிலை தயார்படுத்தப்பட்ட நிலையில் கடந்த டிசம்பர் 8ம் தேதி அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை மருத்துவர்கள் முத்து, லட்சுமி நாராயணன் ஆகியோர் தலைமையில், குடல் இரைப்பை சிறப்பு மருத்துவர் அசோக்குமார் அந்த பெண்ணுக்கு சவால் நிறைந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். இந்த மருத்துவக் குழுவில் மருத்துவர்கள் கணபதி, அய்யனார், நர்மதா, சினேகா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இது போன்ற சிகிச்சைக்கு பொதுவாக நெஞ்சை கிழித்து வலி மிகுந்த அறுவை சிகிச்சை அளிப்பது வழக்கம். ஆனால் அந்த நடைமுறையை கடைபிடிக்காமல் மருத்துவர்கள் அந்த பெண்ணின் கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் ஓட்டை போட்டு, புற்றுநோய் பாதிக்கப்பட்ட உணவுக்குழாய் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக செயற்கை உணவுக்குழாய் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் அந்த பெண் நோயாளி தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். 20 நாட்களுக்கு பின்னர் அந்த பெண்ணின் உடல்நிலை சீரானது.
இதனையடுத்து எந்த விதமான பக்கவிளைவுகள் இல்லாமல் முழு உடல் ஆரோக்கியத்துடன் அமராவதி கடந்த மாதம் 27ந்தேதி அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சவால்கள் நிறைந்த இந்த கடினமான அறுவை சிகிச்சை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செய்வது இதுவே முதல் முறையாகும். மருத்துவம் செய்து கொள்ள போதுமான வசதி இல்லாத ஏழை பெண்ணுக்கு கடினமான அறுவை சிகிச்சையை செய்து சாதனை படைத்த அரசு மருத்துவர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.