மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மற்றும் சர்ஃபேஸ் டெக் நிறுவனத்தின் புதிய தலைவராக சென்னை ஐஐடியில் படித்த முன்னாள் மாணவர் பவன் டவுலூரி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் பலவற்றில் இந்தியர்கள் முக்கிய மற்றும் முன்னணி பொறுப்புகளில் இருந்து வருகிறார்கள். உதாரணமாக, கூகுளின் சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெல்லா ஆகியோர் இருக்கிறார்கள். தற்போது இவர்களது வரிசையில் பவன் டவுலூரி இணைந்து இருக்கிறார்.
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மற்றும் சர்ஃபேஸ் குழுக்கள் தனித்தனி தலைமையின் கீழ் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. இதில் சர்ஃபேஸ் குழுவை வழிநடத்தியது சென்னை ஐஐடி முன்னாள் மாணவரான பவன் டவுலூரி. மைக்கேல் பரக்கின் என்பவர் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் குழுவை வழி நடத்திவந்தார்.
அந்த வகையில் தற்போது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மற்றும் சர்ஃபேஸ் குழுக்கள் மீண்டும் இணைக்கப்பட்டு இந்த நிறுவனத்திற்கு தலைவராக பவன் டவுலூரி நியமிக்கப்பட்டிருக்கிறார். AI தயாரிப்புகளை உருவாக்க மைக்ரோசாஃப்ட் புதிய முன்னெடுப்புகளை எடுத்துவரும் இந்த வேளையில் பவன் டவுலூரியின் நியமனம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளை குவித்து வருகிறது.
பவன் டவுலூரி சென்னை ஐஐடியில் இளங்கலை பட்டம் பெற்றபிறகு, 1999 இல் அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். பிறகு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இணைந்து தனது பயணத்தை தொடங்கிய இவர், கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு மேலாக அதே நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறார். தற்போது இந்த நிறுவனத்தின் உயர் பதவியை பெற்றிருக்கிறார்.
இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்வோர் பட்டியலில் இடம்பிடித்த சென்னை ஐஐடி மாணவர் பவன் டவுலூரிக்கு வாழ்த்துகள்!