fbpx
Homeதலையங்கம்மந்திரம், தந்திரம் பலிக்காது- சமூக நீதிக்கே இறுதிவெற்றி!

மந்திரம், தந்திரம் பலிக்காது- சமூக நீதிக்கே இறுதிவெற்றி!

குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே கல்வி,அரசு வேலைகளில் இடம்பெறுகிறார்கள் என்பதால் நாட்டில் இடஒதுக்கீடு முறை பல போராட்டங்களுக்கு பின்னர் அமல்படுத்தப்பட்டது.

ஆனால் சிலர் சாதிய பாகுபாட்டை நீக்கி சமத்துவத்தை கொண்டு வரவே இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது என்பதை மறைத்து இடஒதுக்கீட்டால்தான் சாதி இருக்கிறது என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

அதே போல கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஒன்றிய அரசின் ஐஐடி கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது.

இதில் பெரும்பாலும் உயர்சாதியினரே கல்வி கற்று வரும் நிலையில், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு புதிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசின் நிறுவனமான பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்டுள்ளது.

அதில், OBC, SC & ST பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு உள்ள இடங்களில் உள்ள காலியிடங்களை பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒன்றிய அரசின் பணியிடங்களில் OBC, SC & ST பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில், அதனை பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது.

கடும் எதிர்ப்பு பெரும் புயலாக வெடித்துக் கிளம்பியதால் அந்த ஆணை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தல் சமயத்தில் தனது ரகசிய திட்டம் வெளியாகி விட்டதே, ஓட்டு வேட்டைக்கு அது வேட்டு வைத்துவிடக் கூடாது என்பதற்காகவே வாபஸ் பெறப்பட்டுள்ளது; இது ஒரு தற்காலிக தந்திரமாகத் தான் தெரிகிறது.

இது ஒரு ஆழம் பார்க்கும் வெள்ளோட்டம்; விஷப்பாம்பு வெளியே தலைகாட்டி நோட்டம் பார்த்து மீண்டும் புற்றுக்குள் போய் பதுங்கி இருக்கிறது. அவ்வளவு தான்.
அது இப்போது வெளியே வராது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவிற்காக அது காத்திருக்கிறதோ என்னவோ?

நேரடி நியமனங்களில் உள்ள நிலுவை காலியிடங்கள் பொதுப் பட்டியலுக்கு கொண்டு செல்லப்படாது என்ற விளக்கம் ஒன்றிய கல்வி அமைச்சகம், யு.ஜி.சி ஆகியவற்றின் ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விளக்கம் மட்டும் போதாது.

எனவே யு.ஜி.சி இறுதி வரைவு வழிகாட்டுதலில் இடஒதுக்கீட்டை மறுதலிக்கும், சமூக நீதிக்கு எதிரான அந்தப்பகுதியை உடனடியாக நிரந்தரமாகத் திரும்பப் பெற்றிட வேண்டும்.

இல்லையென்றால் இதுவே நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான பெரும் பிரசாரமாக உருவெடுக்கும். இளம் தலைமுறையினர் தங்கள் எதிர்காலத்தை இருள் சூழ ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.

யார் என்ன மந்திரம், தந்திரம் செய்தாலும் இறுதியில் சமூக நீதியே வெல்லும்!

படிக்க வேண்டும்

spot_img