தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள மணியகாரன்கொட்டாய் கிராமத்தில் உள்ள ஏரிக்கு வந்த ஒற்றை ஆண் காட்டுயானை நீரில் குளியல் போட்டு கும்மாளமிடும் காட்சியை அவ்வழியாக சென்ற கிராம மக்கள் கண்டு ரசித்தனர்.
கோடை வெய்யில் அதிகரித்து வரும் நிலையில் வனப்பகுதிகள் உள்ள நீர் நிலைகள் வறண்டு வருகின்றன, சமீப காலமாக பாலக்கோடு சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு தொடர்ந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவதால் விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் சேதமடைந்து வருவதுடன், கிராம மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
மணியக்காரன் கொட்டாய் பகுதியில் உள்ள ஏரியில் காட்டு யானை இருப்பதை அறிந்த பாலக்கோடு வனத்துறையினர் அதை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
யானை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் அறி வுறுத்தியுள்ளனர்.