தமிழகத்தில் மகளிர் கால்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்காக சேது எப்சி கால்பந்து அணி, எவர் ரென்யூ எனர்ஜி நிறுவனம் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து எவர்ரென்யூ எனர்ஜி பிரைவேட் லிமிடெட், சேது எப்சி-யின் பிரதிநிதிகளான ஆர்.வெங்கடேஷ், சீனி மொஹைதீன் ஆகியோர் கூறியதாவது:
எவர்ரென்யூ எனர்ஜி நிறுவனம் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமாக திகழ்கிறது.
இதேபோல் உள்ளூர் மக்களின் திறமைகளை மேம்படுத்துவதிலும், ஆர்வமுள்ள வீராங்கனைகள் பிராந்திய, தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பை ஏற்படுத்தும் வழித்தடமாகவும் சேது எப்சி கால்பந்து அணி விளங்குகிறது.
இந்நிலையில் தற்போது முதல் முறையாக சேது எப்சி கால்பந்து அணி, எவர்ரென்யூ எனர்ஜி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. சேது எப்சி கால்பந்து அணியில் தற்போது 30 வீராங்கனைகளை கொண்டுள்ளது.
இந்த அணியில் உள்ள 6 வீராங்கனைகள் தேசிய அளவிலான இந்திய மகளிர் லீக் (ஐடபிள்யூஎல்) போட்டியில் விளையாடி வருகின்றனர். ஐடபிள்யூஎல் சாம்பியனாகி, ஏஎப்சி மகளிர் கிளப் சாம்பியன்ஷிப்-ற்கு அணியை தகுதிப்படுத்த வேண்டும் என்பதே சேது எப்சி, எவர்ரென்யூ எனர்ஜி கூட்டணியின் இலக்காக உள்ளது.
உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் அதே வேளையில் அனுமதிக்கப்பட்ட வரம்பிற்கு உட்பட்டு, நேபாளத்தை சேர்ந்த இரு வீரர்களும், கென்யாவை சேர்ந்த ஒரு வீரரும் அணிக்கு சர்வதேச திறமையை கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.