சங்கமித்திரா சுற்றுச்சூழல் கல்வி முன்னேற்ற அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் அன்னூர் அருகே குன்னத்தூர் ஊராட்சி கடத்தூர் குளக்கரையில் 1,701 மரக்கன்றுகள் நடப்பட்டன.
தமிழ்நாடு அரசு வனத்துறை, ஸ்ரீ ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரியுடன் இணைந்து இந்நிகழ்ச்சி நடைபெற்றது. குன்னத்தூர் ஊராட்சி தலைவர் கீதா தங்கராஜ் தலைமை வகித்தார்.
சங்கமித்திரா அறக்கட்டளை செயல் இயக்குநர் வி.டி.விஜயகுமார் வரவேற்றார். ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட தலைவர் ஆர்.கேசவசாமி முன்னிலை வகித்தார். ஊர்த்தலைவர் பெ.துரைசாமிநாயுடு, சிவசக்தி சமூக பணி இயக்க செயலாளர் என்.தங்கராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி துணை முதல்வர் பி.கருப்பசாமி மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 150 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.