கோவை அவிநாசி ரோடு இந்திய தொழில் வர்த்தக சபை வளாகத்தில் ரோட்டரி கிளப் ஆப் கோவை சார்பில் சிறந்த சாதனையாளருக்கான விருது வழங்கும் விழா நடந்தது.
இதில் கங்கா மருத்துவமனை இயக்குனர் ராஜசபாபதிக்கு விருதை முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு வழங்கினார். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன தலைவர் கிருஷ்ணன், ரோட்டரி கிளப் ஆ கோவை விஜய் பாலசுந்தரம், மாவட்ட கவர்னர் சுந்தரவடிவேலு முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் விருதை வழங்கி முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசியதாவது:
ஒருமைப்பாடு என்பது நேர்மையில் இருந்து வேறுபடுகிறது. ஐ.பி.எஸ்., விதி, போலீசாக பணிபுரிபவர் ஒருமைப்பாட்டை நிலை நிறுத்த வேண்டும் என கூறுகிறது.
தமிழக போலீசாரின், 80 சதவீத பணி மக்களிடம் அமைதியையும், நல்வாழ்வையும் ஏற்படுத்துவதாகவே உள்ளது. அனைவரையும் தங்கள் சகோதரர்களாக பார்க்கும் போது அந்நாடு மேன்மையடையும். முடியும் என்று நினைப்பவர்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றனர்.
வாழ்வில் வெற்றி பெற திட்டமிடல், தொடர் கற்றல், அறிவை சேமித்தல், உற்றுநோக்குதல் ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும். எந்த ஒரு செயலையும் துவங்கிய பின் பாதியில் நிறுத்தக்கூடாது. கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.
இவ்வாறு, அவர் பேசினார்.