வடகிழக்குப் பருவமழை நடப்பு ஆண்டு வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை புரட்டிப் போட்ட கனமழை தற்போது தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வருகிறது.
நேற்று முதல், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் கனமழை வெளுத்து வருகிறது. மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போய் உள்ளது. மீட்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் முடுக்கி விட்டுள்ளார்.
நேற்று இரவு முதல் விடாது பெய்து வரும் மழையால் தென் மாவட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதி நீர் இணைப்புத் திட்டத்தில் உபரிநீரை கொண்டு செல்வது குறித்து, நீர்வளத்துறை அமைச்சருடனும் நீர்வளத்துறை அலுவலர்களுடனும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்தாலோசித்தார்.
இந்த ஆலோசனையின் போது எடுக்கப்பட்ட முடிவின்படி, கன்னடியன் அணைக்கட்டில் இருந்து வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் பரிசோதனை அடிப்படையில் 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு கால்வாயில் தண்ணீரை திறந்து விட்டார்.
இவ்வாறு உபரிநீர் திறக்கப்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளில் வாழும் விவசாயிகளின் நூற்றாண்டு கனவான இத்திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால், மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகி இருந்தபோதிலும் வேளாண் பெருமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2006-ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் தாமிரபரணி &- கருமேனியாறு – நம்பியாறு நதி நீர் இணைப்புத் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2009ஆம் ஆண்டு இந்த திட்ட பணிகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில் பணிகள் முடிந்துள்ள சூழலில், தற்போது வடகிழக்குப் பருவமழையால் தொடர் மழை பெய்து வரும் நிலையில், உபரி நீரை, இந்த சோதனை ஓட்டத்திற்குப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதி விவசாயிகள் பயனடைய உள்ளனர்.
இந்த திட்டத்தின் மூலம் 17,002 ஹெக்டேர் புதிய பாசனப் பரப்பு உட்பட 23,040 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நாங்குநேரி, இராதாபுரம் ஆகிய 3 சட்ட சபை தொகுதிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளும் பயன் பெறும்.
நெல்லை மாவட்டத்தில் 32 கிராமங்கள், 177 குளங்கள், 2,657 கிணறுகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்கள், 75 குளங்கள், 2,563 கிணறுகள் என மொத்தம் 50 கிராமங்கள், 252 குளங்கள், 5,220 கிணறுகள் பயன் பெறும்.
விரைவில் இந்த திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். அவரை வேளாண் குடிமக்கள் மனதாரப் பாராட்டுகிறார்கள்.
சமயோசிதமாகச் செயல்பட்டு அசத்தி இருக்கிறார், முதல்வர் மு.க.ஸ்டாலின். வாழ்த்துகள்!