ஈரோட்டில் நேற்று அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 6 நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயனுள்ள பணியாக இருக்கும். படிப்படியாக அறுவடை கூடும் இடங்களில் 51 இடங்களில் கொள்முதல் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் விவசாயிகளுக்கு குறைகள் கோரிக்கைகள் இருந்தால் கலெக்டர் மூலம் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல் கிரேட் ஏ விற்கு ஒரு கிலோ 23.10 ரூபாயும் பொது ரகத்திற்கு 22 ரூபாய் கொடுக்கப்படுகிறது.
கீழ்பவானி கால்வாய் விவ காரத்தில் அழைத்து பேசியது தவறில்லை. முடிவு என்ன என்பதில் தான் இருக்கிறது. விவசாயிகள் ஒத்துழைப்புடன் சீரமைப்பு வேலை நடக்க வேண்டும். நீதிமன்றத்திற்கு எதிராக எதுவும் செய்யவில்லை.முடிவு நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டு தான் இருக்கும். இதில் உள்நோக்கம் இல்லை. கீழ்பவானியில் கடைமடைக்கு செல்லவேண்டியதற்கு ஆனதை செய்யவேண்டியது எங்களின் கடமை. எள் அளவும் நீதிமன்ற தீர்ப்பில் மீறும் விதம் எதுவும் இருக்காது.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் 16 குளங்கள் சோதனையோட்டம் நடைபெற வேண்டிய உள்ளது.இப்பணிகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிவடையும். டாஸ்மாக் பார் அனுமதி இன்றி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் எதிர்ப்பை அடுத்து பல டாஸ்மாக் கடைகள் இடமாற்றம் செய்துள்ளோம். ஈரோட்டில் 8 டாஸ்மாக் கடைகள் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.