fbpx
Homeதலையங்கம்மதில் மேல் பூனையாக பாமக!

மதில் மேல் பூனையாக பாமக!

தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் தலைமையில் மும்முனைப் போட்டி என்பது ஒரு மாதத்திற்கு முன்பே உறுதியாகி விட்டது.

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு அனைத்தும் வெற்றிகரமாக முடிந்து விட்டது. மற்ற இரு அணிகளிலும் பேச்சுவார்த்தை, பேரம் நீடிக்கிறது. இழுபறி நீடிப்பதற்கு பாமகவும் தேமுதிகவும் தான் காரணம். இவ்விரு கட்சிகளும் தங்கள் கூட்டணி முடிவை அறிவித்து விட்டால் தமிழ்நாட்டில் தேர்தல் களம் இறுதிப் போட்டிக்குத் தயாராகி விடும்.

ஒதுக்கப்படும் தொகுதிகளுடன் ஒரு மாநிலங்கவை எம்பி பதவியையும் தரவேண்டும் என தேமுதிக நிபந்தனை வைத்தது. அதிமுகவுடனும் பாஜகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது. இதனை ஏற்க முதலில் மறுத்த அதிமுக, இப்போது வேறு வழியின்றி சம்மதம் தெரிவித்து விட்டதாக தகவல்கள் வருகின்றன.

அதேபோல அதிமுக கூட்டணியில் தான் பாமக சேரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. வட மாவட்டங்களில் பலம் வாய்ந்த ஒரு கட்சியாக பாமக திகழ்கிறது. அதனால் அக்கட்சியை தங்கள் கூட்டணிக்கு இழுப்பதில் அதிமுகவும் பாஜகவும் போட்டிபோட்டு பேச்சுவார்த்தை நடத்தியது. கூடுதல் தொகுதிகளைத் தருவதாகவும் ஒரு மாநிலங்களவை எம்பி சீட் ஒதுக்குவதாகவும் இரு கூட்டணித் தலைமைக் கட்சிகளும் ஒப்புக் கொண்டன.

அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே டாக்டர் ராமதாஸ் விரும்பினார். ஆனால் அன்புமணி ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைக்க வலியுறுத்தினார். அன்புமணி கை ஓங்கி, மதில் மேல் பூனை போல எந்தப்பக்கம் தாவலாம் என காத்திருந்த பாமகவின் பார்வையில் இருந்து அதிமுக இப்போது மறைந்து விட்டது.

பாமக கையை விட்டு போவது உறுதியான நிலையில் தான் தேமுதிகவை, கேட்டதை கொடுத்து தன்பக்கம் இழுக்க இறங்கி வந்தது அதிமுக.

மாநிலங்கவை சீட் மட்டுமின்றி ஒன்றிய அரசில் அமைச்சர் பதவிக்கும் முன்னாள் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி குறிவைத்து காய் நகர்த்தி இருப்பதாகவே தெரிகிறது. அது பற்றி பிரதமர் மோடியுடன் கலந்து பேசி முடிவெடுக்கலாம் என்றும் பாஜக மேலிடம் உறுதி அளித்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

மதில் மேல் நிற்கும் பூனை (பாமக) அந்தப் பக்கம் (பாஜக) தாவ நல்ல நேரம் பார்த்து காத்திருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டது. பரபரக்கும் தேர்தல் பிரசாரத்தைப் பார்க்க தமிழ்நாட்டு வாக்காளர்கள் அதிக எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

எந்த கூட்டணியில் சேருவது என்பதை முடிவு செய்து விட்டபிறகு, அதனை இறுதி செய்வதில் பாமகவும் தேமுதிகவும் இனியும் காலம் தாழ்த்துவதில் அர்த்தமில்லை!

படிக்க வேண்டும்

spot_img