கோவை தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தினர் துவங்கி உள்ள ஆட்டோவில் நீர் மோர் வழங்கும் திட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றி கழகமாக அரசியல் கட்சியை துவங்கியது முதல் அவரது ரசிகர்கள், சமூக பணிகளில் கூடுதல் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். கோவை தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தினர் ஏற்கனவே ரொட்டி, முட்டை பால் திட்டம், குளிர்கால போர்வை வழங்குவது, விஜய் பயிலகம், நூலகம் என பல்வேறு சமூக நலதிட்டங்களை செயல்படுத்தி பொது மக்கள் மத்தியில் கூடுதல் கவனம் பெற்ற நிலையில், தற்போது ஓடும் பயணிகள் ஆட்டோவில் நீர் மோர் வழங்கும் புதிய திட்டத்தை துவக்கி உள்ளனர்.
அதன்படி கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், பயணிகள் ஆட்டோவில் நீர் மோரை வைத்து, அதை ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளுக்கும், மற்றும் ஆட்டோ செல்லும் இடங்களில் உள்ள பொதுமக்களுக்கும் வழங்கி வருகின்றனர்.
தமிழக வெற்றி கழகத்தின் கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பாக துவங்கப்பட்டு இந்த ஆட்டோவில் நீர் மோர் திட்டத்தை தெற்கு மாவட்ட தலைவர் விக்னேஷ் மற்றும் இளைஞரணி தலைவர் பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர். முதல் கட்டமாக ஐந்து ஆட்டோக்களில் துவங்கியுள்ள இந்த நீர் மோர் திட்டம் படிப்படியாக புறநகர் மற்றும் நகர் பகுதிகளில் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.பயணிகள் ஆட்டோவில் துவங்கப்பட்டுள்ள இந்த நீர் மோர் வழங்கும் திட்டத்தை பொதுமக்கள் பலர் பாராட்டி வருவது குறிப்பிடதக்கது.