கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களைப் புரட்டிப் போட்டது. இந்த தாக்கத்திலிருந்து மீண்டு வருவதற்குள் மற்றொரு சவாலாக பெருவெள்ளத்தைத் தென் தமிழ்நாடு எதிர்கொண்டது. இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.6000 நிவாரண நிதியை தமிழ்நாடு அரசு கொடுத்தது.
இந்த இரண்டு பேரழிவுகளையும் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், இதனை எதிர்கொள்ள தற்காலிகமாக ரூ.7,033 கோடியும், நிரந்தரமாக ரூ.12,659 கோடியும், உடனடியாக ரூ.2000 கோடியை விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு தவணையை மத்திய அரசு விடுவித்திருந்தது. அதாவது மொத்தமாக ரூ.72,961.21 கோடியை விடுவித்திருந்தது. இதில் அதிகபட்சமாக பாஜக ஆளும், பிரதமர் மோடியின் சொந்த தொகுதி அமைந்துள்ள உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு ரூ.13,088.51 கோடியை மத்திய அரசு பிரித்து கொடுத்திருந்தது. தமிழ்நாட்டிற்கு ரூ.2,976.10 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.
சென்னை பெருவெள்ள பாதிப்பை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டுச் சென்றார். அதன் பிறகு ஒன்றிய பேரிடர் மேலாண்மைக் குழுவும் வந்த பார்வையிட்டு பாதிப்புகளைக் கணக்கெடுத்தது, அவர்கள் தமிழ்நாட்டு அரசின் நிவாரணப் பணிகளைப் பாராட்டி அறிக்கை விட்டுச் சென்றனர்.
அதே போல் தென் மாவட்ட வெள்ளப் பாதிப்புகளை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வை யிட்டுச் சென்றார்.
இரண்டு அமைச்சர்களுமே பார்வையிட்டுச் சென்று 30 நாள்கள் ஆகிவிட்டன. இன்றுவரை அவர்கள் வெள்ளச்சேதம், அது தொடர்பான நிவாரண நிதி மற்றும் வாழ்வாதாரம் இழந்த விவசாயிகளுக்கு ஏற்பட்ட பேரிழப்புகள் குறித்து எந்த ஒரு அறிக்கையையும் வெளியிட வில்லை.
தமிழக புயல் வெள்ளப் பாதிப்புக்காக சிறப்பு நிதி ஒரு பைசா கூட வழங்கவில்லை. இயற்கைப் பேரிடரை சமாளிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒன்றிய அரசு ரூ.900 கோடியைக் கொடுப்பது வழக்கமானது. இதையும், திடீரென இயற்கைப் பேரிடருக்கு தனித்து அளிக்கவேண்டிய நிதியையும் ஒன்றோடு ஒன்று குழப்புவது எந்த வகையில் நியாயம்?
2021 மே மாதம் குஜராத்தை டாக்டே என்ற ஒரு புயல் தாக்கியது. இந்தச் சம்பவம் நடந்த இரண்டாம் நாளே, பாதிப்புக் குள்ளான இடங்களை எல்லாம் சுற்றிப் பார்வையிட்ட பிரதமர் மோடி ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக அந்த மாநிலத்திற்கு வழங்கினார். அதில் இறந்தவருக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீட்டை அறிவித்தார். ஆனால், இந்த நிமிடம் வரை பிரதமர் மோடி மழை & வெள்ளத்தால் தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு ரூபாயைக் கூட ஒதுக்கவில்லையே, ஏன்?
இந்த நிலையில் தமிழக எம்பிக்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து உடனடியாக நிவாரண நிதி ஒதுக்கக் கோர உள்ளனர். நேற்று பிரதமர் மோடியை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் நேரில் வலியுறுத்தி இருக்கிறார்.
ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு வேண்டாம். தமிழ்நாட்டு மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? உடனடியாக புயல் & வெள்ள நிவாரணத்திற்கான சிறப்பு நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.
அரசியல் மனமாச்சரியங்களை கைவிட்டு பிரதமர் மோடி கருணை காட்ட வேண்டும்!