வளைவுகளில் முந்தாதீர், மது குடித்துவிட்டு வண்டி ஓட்ட வேண்டாம், மித வேகம் மிக நன்று… என விதவிதமாக டிராபிக் போலீஸார் விளம்பரங்களைச் செய்தாலும் பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு அது உரைப்பதே இல்லை. இதனால் சாலை விபத்துகள் ஏற்பட்டு நிறைய பேர் உயிரிழக்க நேரிடுகிறது. இதைத் தடுக்கத்தான் போலீஸார் கடுமையான டிராபிக் விதிகளை அமல்படுத்துகின்றனர்.
டிராபிக் விதிகளை மீறுவோருக்கு அரசும் கடுமையான தண்டனை விதிக்கிறது. இருந்தாலும் பலர் இதைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. இதைத் தடுப்பதற்காக இப்போது புதிய டிராபிக் விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.
செல்லத்தக்க மாசுக்கட்டுப்பாடு சான்று இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் பங்குகளிலேயே ஆட்டோமேடிக்காக அபராதம் விதிக்கும் நடைமுறை இப்போது அமல் செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் மாசு கட்டுப்பாடு சான்று இல்லாத வாகனங்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தச் சான்று அவசியம் என்றாலும் பல வாகன ஓட்டிகள் அதை புதுப்பிக்கத் தவறிவிடுகின்றனர்.
இப்போது கார்களில் இந்த சான்று இல்லாவிட்டால் அவை ரெஜிஸ்ட்ரேஷன் மூலம் பிளாக் லிஸ்ட் செய்யப்படும்.வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் நவீன கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். எல்லா கார்களுக்குமே பெட்ரோல் அல்லது டீசல் தேவை. பெட்ரோல் பங்குகளில் இந்த வாகனங்கள் அடையாளம் காணப்படும்.
மாசுக்கட்டுப்பாடு சான்று இருக்கிறதா என்பதை சிஸ்டம் சரிபார்க்கும். அவரது சான்று காலாவதியாகி இருந்தால் ஓட்டுநரின் மொபைல் நம்பருக்கு அபராதத் தொகை எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். சான்று காலாவதியான மறுநாள் அல்லது அன்றைக்கு மாலையில் அது புதுப்பிக்கப்பட வேண்டும்.
மாசுக்கட்டுப்பாடு சான்றை புதுப்பிக்க ஓட்டுநர்களுக்கு ஒரு சில மணிநேரம் அவகாசம் அளிக்கப்படும். சான்று உரிய நேரத்தில் புதுப்பிக்கப்படாவிட்டால் டிரைவரின் மொபைல் எண்ணுக்கு ரூ.10,000 அபராதம் தெரிவிக்கப்படும். இந்த ஆட்டோமேடிக் சிஸ்டம் மூலம் மாசுக்கட்டுப்பாடு விதிகள் கடைப்பிடிப்பது உறுதி செய்யப்படும் என்று போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தப் புதிய நடைமுறையின் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படுவதோடு வாகனங்களும் சுத்தமாக இயங்கும்.
இந்த கடுமையான அபராதம் மூலம் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தின் மாசுக்கட்டுப்பாடு சான்றை உரிய நேரத்தில் புதுப்பிப்பது உறுதி செய்யப்படும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த புதிய விதியை மீறுவோர் மீது போக்குவரத்து காவல்துறை தொய்வின்றி நடவடிக்கை எடுத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை!