தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகூட இல்லாத நிலையில், அரசியல் கட்சிகள் இப்போதே தங்களது பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன.
இந்தத் தேர்தலிலும் திமுக தலைமையில் -காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கொண்ட அதே கூட்டணி களமிறங்கும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில் எதிரணியில் அதிமுகவும் பாஜகவும் கைகோர்த்துள்ளன. புதிதாகத் தொடங்கப்பட்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்துப் போட்டியிடும் எண்ணத்தில் உள்ளன.
இந்த நிலையில் திமுகவுக்கு எதிரான கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையலாம் என விஜயின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால் அதனை தமிழக வெற்றிக் கழகம் நிராகரித்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று விஜய் தலைமையில் புதிய ஆட்சி அமைப்போம் என அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.
மறுபுறம், பழனிசாமியின் அழைப்புக்கு பதிலளித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ளன; பொறுத்திருந்து பாருங்கள் என பதிலளித்ததுடன், தீமையை வைத்து தீமையை எப்படி அழிக்க முடியும்? எனவும் வினவியுள்ளார்.
இதற்கு முன்னதாககூட கூட்டணிக்கு வருமாறு பழனிசாமி விடுத்திருந்த அழைப்பை தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகியவை பெரிதாக எடுத்துக்கொள்ளாத நிலையில், தற்போது மீண்டும் கூட்டணிக்காக பழனிசாமி திறந்துவைத்துள்ள கதவை நோக்கி விஜய், சீமான் செல்லப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார்.
அக்கட்சிகள் ஏற்க மறுத்ததோடு மதவாத கொள்கை கொண்ட பாஜகவுடன் சேர்ந்திருக்கும் அதிமுகவோடு ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று அக்கட்சிகளின் தலைவர்கள் திருமாவளவன், முத்தரசன், சண்முகம் ஆகியோர் அறுதியிட்டு கூறி விட்டனர்.
“2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் ஒற்றைக்கட்சி ஆட்சியே அமையும்,” என்று எடப்பாடி பழனிசாமி கூறிவரும் நிலையில் தவெகவை எந்த அடிப்படையில் கூட்டணிக்கு அழைத்தார் என்பது புரியவில்லை.
விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என அக்கட்சி அறிவித்து விட்ட நிலையில் அழைப்பு விடுப்பதில் அர்த்தமே இல்லை. விஜய்யை முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஏற்பாரா என்ன?
ஒரு கட்சியை கூட்டணிக்கு அழைக்க முதலில் அக்கட்சியின் தலைவர்களை அணுகுவார்கள். கிரீன் சிக்னல் கிடைத்தால் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி அமைப்பார்கள்.
ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, தனது கூட்டணிக்கு வர மாட்டார்கள் என்பது தெரிந்தே பகிரங்கமாக அழைப்பு விடுப்பது தனது பிரசாரத்தில் ஏதோ கொஞ்சம் பரபரப்பு இருக்கட்டுமே என்பதற்காகத் தானே தவிர, வேறு எந்த பயனும் கிட்டப்போவதில்லை என்பது ஊரறிந்த விஷயம்.
முதலில் பாஜகவுடனான கூட்டணியை மக்கள் மனதில் பதிவாகும் வகையில் எடப்பாடி பழனிசாமி நிலைநிறுத்தி தனது பலத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பாஜகவுடனான கூட்டணியையே சிறப்புடன் ஒருங்கிணைக்க முடியாத அவர், வரவே வராது என்று தெரிந்தும் தமிழ்நாட்டில் இருக்கின்ற கட்சிகளை எல்லாம் வா, வா என்றழைத்தால் என்னவென்று சொல்வது?
வாய்தவறி திமுகவையும் கூட்டணிக்கு அழைக்காமல் இருந்தால் சரி!



