கோவையில் போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 6ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணை யம் சார்பில் 2-ம் நிலை காவலர்கள், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான உடற்தகுதி தேர்வுகள் கடந்த 6-ந் தேதி முதல் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
கோவையில் உடற்தகுதி தேர்வுகள் பெண்களுக்கு நேரு விளையாட்டு மைதானத்திலும், ஆண்களுக்கு போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்திலும் நடைபெற்று வருகிறது. இந்த உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு முதல் நாளில் சான்றிதழ், உயரம் சரிபார்ப்பு மற்றும் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கயிறு ஏறுதல், உயரம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஆண்கள் 208 பேர், பெண்கள் 229 பேர் கலந்து கொண்டனர்.
கடந்த 6ம் தேதி தொடங்கி 5 நாட்களாக நடைபெற்று வந்த இந்த உடல் தகுதி தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர் காணலுக்கு அழைக்கப் படுவார்கள்.