லோக்சபா தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் புறநகர் போலீசார் அவ்வபோது கொடி அணிவகுப்பை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாநகர போலீசாரும் கொடி அணிவகுப்பு நடத்த திட்டமிட்டனர்.
இதையடுத்து நேற்று உக்கடம் மற்றும் காந்திபுரத்தில் மாநகர போலீசார் கொடி அணிவகுப்பை நடத்தினர். காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த கொடி அணிவகுப்பை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவங்கி வைத்தார்.
இதில் வடக்கு துணை கமிஷனர் ஸ்டா லின், உதவி கமிஷனர்கள், மாநகர ஆயுதப்படை போலீசார், அதிரடிப்படை போலீசார், துணை ராணுவத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் கொடி அணிவகுப்பில் வஜ்ரா வாகனமும் பங்கேற்றது.
ஒரு அணிவகுப்பு மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே துவங்கி கிராஸ்கட் ரோடு வழியாக கொங்குநாடு மருத்துவமனை அருகே நிறைவடைந்தது. மற் றொரு அணிவகுப்பு காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்டில் துவங்கி வி.கே.கே., மேனன் ரோடு வரையும் நடந்தது. அதே போல உக்கடம் பஸ் ஸ்டாண்டிலும் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.