தமிழகத்தில் நடைபெற்று வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திருச்சி வந்த பிரதமர் மோடியை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனியாக சந்தித்து பேசினார். எடப்பாடி பழனிசாமி குறித்தே அவர்கள் முக்கியமாகப் பேசி இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தனியாக நிற்கப்போவதாக அறிவித்து, கூட்டணி கட்சியான பாஜகவை கழட்டி விட்டுள்ளது. இதனால் டெல்லியில் உள்ள பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் தமிழக பாஜ தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான் பிரதமர் மோடி – ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் மோடியை சந்திக்க 5 நிமிட நேரம் ஒதுக்கியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் படுகிறது.
பிரதமரை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் ஒரு கடிதம் மற்றும் ஒரு பைலை கொடுத்திருக்கிறார். அதில் எடப்பாடி தொடர்பான ரகசியங்கள் இருந் ததாக தெரிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன், நான் உண்மையை வெளியே சொன்னால் எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்
என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி இருந்தார். இது பற்றியும் பிரதமருடன் ஓ.பன்னீர்செல்வம் விவாதித்திருக்கக் கூடும்.
மேலும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அதிமுக அமைச்சர்கள் பலர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உள்ளிட்ட பல வழக்குகள் விசாரணை அமைப்புகள் வசம் நிலுவையில் உள்ளன.
அந்த வழக்குகளை ஒன்றிய அரசு மீண்டும் கையில் எடுத்தால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்குத் திணறடிக்கும் நெருக்கடியை கொடுத்து விடலாம் என பிரதமரிடம் ஓ.பன்னீர்செல்வம் சொல்லாமலா இருந்திருப்பார்?
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். வரும் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை காட்ட வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி கையிலெடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.
அதில் ஒன்றாக, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை பிரதமர் மோடி எப்படி கையாளப்போகிறார் என்பது போகப்போகத்தான் தெரியும்!