நாடு முழுவதும் சமீபத்தில் முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. எனவே இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை தீவிரமடைந்துள்ளது. 13 மாநிலங்களில் உள்ள 89 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பரப்புரை மேற்கொண்டிருந்த மோடி, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை விமர்சித்து பிரசாரம் மேற்கொண்டார். பிரதமர் மோடி பேசியதாவது: “காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று பேசினார்கள்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்களிடம் உள்ள தங்கம் உள்ளிட்ட சொத்துக்களை பறித்து அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்களிடம் கொடுத்து விடுவார்கள். சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஊடுருவியவர்களிடம் உங்கள் சொத்துக்களை கொடுத்து விடுவார்கள்.
நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை அவர்களிடம் கொடுக்க வேண்டுமா? இதை நீங்கள் ஏற்பீர்களா? இதுதான் நகர்ப்புற நக்சல்களின் சிந்தனை. என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியை பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை” என்று பேசியிருந்தார்.
காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில், நாடு முழுவதும் சமூக-பொருளாதார மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும். அதில் பெறப்படும் தரவுகளின் அடிப்படையில், உறுதியான நடவடிக்கைகளை எடுப்போம்“ என்று குறிப்பிட்டு இருந்தது. அதில் செல்வத்தைப் பகிர்ந்தளிப்பது குறித்த எந்தவொரு வார்த்தையும் இல்லை.
பிரதமர் மோடி பேசியது உண்மைக்கு மாறான தகவல் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் அப்படி எதையும் கூறவில்லை என்றும் அரசியல் விமர்சகர்களும் விளக்கமளித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமின்றி பிற கட்சித் தலைவர்களும் இதற்கு பதிலடி கொடுத்திருக்கின்றனர்.
மறுபுறம் மோடி பேசியது குறித்து முழு தகவல் அவரது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாதது விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது. வழக்கமாக பிரதமர் ஆற்றிய உரைகள் அனைத்தும் அவரது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பதிவேற்றப்படும். ராஜஸ்தானில் அவர் பேசியதும் இந்த தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது.
ஆனால், ‘இஸ்லாமியர்கள்’, ‘ஊடுருவல்காரர்கள்’, ‘அதிக குழந்தைகளை பெற்றெடுப்பவர்கள்’ உள்ளிட்ட வார்த்தைகளை பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்த உரைவில் குறிப்பிடாமல் தவிர்க்கப்பட்டு இருந்தது.
இப்படி இருக்கும் போது, பிரதமர் மோடி பேசியதை முழுமையாக அப்லோட் செய்தால், தாமாகவே குற்றத்தை ஒப்புக்கொண்டதை போல ஆகிவிடும். எனவேதான் குறிப்பிட்ட சில வார்த்தைகளை மட்டும் பாஜக வேண்டும் என்றே விட்டுவிட்டது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த வார்த்தைகளை அவர் பயன்படுத்தியதற்கான வீடியோ ஆதாரம் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் பேசியதை வைத்து எதிர்க்கட்சிகள், பிரதமர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் பதில் தரமறுத்து மவுனம் சாதிக்கிறது.
அதோடு விட்டாரா பிரதமர் மோடி? மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்கள் சொத்துக்களை பறித்து பகிர்ந்தளித்து விடும் என்று உத்தரபிரதேச பிரசார கூட்டத்தில் நேற்று மீண்டும் பேசி இருக்கிறார். ஆனால் நல்லவேளையாக முஸ்லிம்கள் குறித்த சர்ச்சைக் கருத்தை அவர் தவிர்த்து விட்டது வரவேற்கத்தக்கது.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. மதசார்பற்ற நாடு. வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு…என்றெல்லாம் பெருமை பேசிக் கொண்டிருக்கும் மக்களைக் கொண்ட நாடு. அப்படியிருக்க நாட்டின் பிரதமரே காங்கிரசை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் இஸ்லாமியரை விமர்சித்திருப்பது சரியா? நம் நாட்டைப் பற்றி உலக நாடுகள் என்ன நினைக்கும்? என்ற கேள்விகள் நாடுமுழுவதும் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. இது தேவையா?
இதோ மோடி புகழும் திருக்குறளில் ஒரு குறள். அதன்வழி நடந்தாலே போதும்.. எந்த சர்ச்சைக்கும் இடமிருக்காது.
யாகாவா ராயினும் நாகாக்க, காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
-!