ஓமலூர் வட்டார கிராமங்களில் உழவடை கருவிகள் செய்யும் பீகார் மாநில தொழிலாளர்கள் முகாமிட்டுள்ளனர். சாலை ஓரங்களில் விவசாய கருவிகள், வெட்டு கத்திகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். விலை குறைவு என்பதால் விவசாயிகள், பொதுமக்கள் வந்து வாங்கி செல்கின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர், தாரமங்கலம், காடையாம்பட்டி வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. இந்த பகுதி பொதுமக்கள், முழுமையாக விவசாயத்தை நம்பியே பிழைப்பு நடத்தி வருகின்றனர். நடப்பாண்டு போதுமான அளவிற்கு பருவமழை பெய்ததால் ஏரி, குளம், குட்டை மற்றும் நீர் நிலைகளில் ஓரளவிற்கு தண்ணீர் நிரம்பியுள்ளன. அதனால், அனைத்து பகுதிகளிலும் விவசாய பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட வெளிமாநிலத்தை சேர்ந்த கொல்லர் தொழிலாளர்கள் குடும்பத்துடன் வந்து ஓமலூர் வட்டார கிராமங்களில் முகாமிட்டுள்ளனர். இங்கு சாலை ஓரங்களில் தற்காலிக கொல்லர் பட்டறை அமைத்து, விவசாயத்திற்கும் உழவுக்கும் தேவையான கருவிகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். முத்துநாயக்கன்பட்டி, காமலாபுரம் ஆகிய கிராமங்களில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மண் வெட்டி, களை வெட்டி, அறிவால், கொடுவாள், கத்தி, உழவு கலப்பை கொழு, கோடாரி, சம்மட்டி, அரிவால் கத்திகள், வெட்டு கத்திகள், இறைச்சி கடை கத்திகள் உள்ளிட்ட பல்வேறு கருவிகளை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர்.
இங்கு மிகவும் குறைந்த விலைக்கு தரமான, நீண்டகாலம் உழைக்கும் கருவிகள் கிடைப்பதால், விவசாயிகள், பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். தற்போது உழவடை காலம் என்பதால், வெளிமாநில கொல்லர்கள், ஓமலூர், தாரமங்கலம், காடையாம்பட்டி ஆகிய வட்டார கிராமங்களில் சுமார் இரண்டு மாதங்களுக்கு தங்கியிருந்து வருவாய் ஈட்டி செல்வர்கள். பெண்கள் உட்பட தொழிலாளர்கள் நேர்மையாக உழைத்து, தாரமான பொருட்களை உற்பத்தி செய்து கொடுப்பதால், அவர்களுக்கு உதவிடும் வகையில், இப்பகுதி மக்கள், பீகார் மாநில கொல்லன் பட்டரை தொழிலாளர்களிடமே வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.