fbpx
Homeபிற செய்திகள்எடப்பாடியை எதிர்த்து பசும்பொன்னில் கோஷம்!

எடப்பாடியை எதிர்த்து பசும்பொன்னில் கோஷம்!

முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன்னுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.
அடுத்தடுத்து அரசியல் தலைவர்களும் மரியாதை செலுத்திய வண்ணம் இருந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியும், அதிமுக முன்னாள் அமைச்சர்களுடன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பசும்பொன் சென்றார்.

அதிமுக டி-ஷர்ட் அணிந்த தொண்டர்கள் (பவுன்சர்கள்) புடைசூட பசும்பொன்னில் வந்து இறங்கினார் எடப்பாடி பழனிசாமி. ஏதேனும் பிரச்சினை வரலாம் என்ற பயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் தான் பவுன்சர்களுடன் வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தான் அசிங்கப்படுத்தப்படலாம் என்று அஞ்சி இருக்கிறார். அதனால் தான் இந்த துர்பாக்கிய நிலை. அவர் எதிர்பார்த்தது போலவே வரும் வழியில் திரண்ட ஒரு கூட்டம், தேர்தல் ஆதாயத்திற்காக வர வேண்டாம் என முழக்கமிட்டனர்.
எனினும், அதனை கண்டும் காணாதது போல எடப்பாடி பழனிசாமி, தேவர் நினைவிடத்திற்குச் சென்றார்.

வெளியே நின்றிருந்தவர்கள் எடப்பாடி பழனிசாமி ஒழிக, இபிஎஸ் ஒழிக என்று தொடர்ச்சியாக முழக்கமிட்டனர். அத்துடன், கடந்த ஆண்டு பசும்பொன்னுக்கு அஞ்சலி செலுத்த வராத எடப்பாடி பழனிசாமி, இப்போது மட்டும் ஏன் வர வேண்டும் என்றும், மக்களவைத் தேர்தல் வருவதால் தான் அவர் வந்துள்ளார் என்றும் கூச்சலிட்டனர்.

மேலும், சசிகலாவை ஏமாற்றிய எடப்பாடி என்றும், தேர்தலில் தேவர் வாக்குகளை பெறுவதற்காக வந்த எடப்பாடி என்றும் முழக்கமிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இபிஎஸ் செய்தியாளர்களைச் சந்தித்து விட்டு அங்கிருந்து விடைபெற்றார். திரும்பிச் செல்லும்போது எடப்பாடி பழனிசாமி கார் மீது ஒரு இளைஞர் செருப்பு வீச முயன்றதால் பரபரப்பு உண்டானது. அந்த நபரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

சசிகலா, டிடிவி தினகரன் தரப்பினர்தான் ஆள் வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முழக்கமிட வைத்தனர் என்று குற்றம்சாட்டும் அதிமுகவினர், எடப்பாடி பழனிசாமிக்கு தேவர் சமுதாயத்தினர் மத்தியில் எதிர்ப்பு இருப்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள் என்றும், அவர்களின் எண்ணம் பலிக்காது என்றும் அடுக்குகிறார்கள்.

ஆனாலும் தென் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் செல்வாக்கு மிகக்குறைவு என்பதே அதிமுகவிற்கு எதிரான கட்சிகளின் கணிப்பாக உள்ளது.
அதிமுக பிளவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி சந்திக்கும் முதல் பொதுத் தேர்தல் 2024 நாடாளுமன்றத் தேர்தல் தான்.

அவருக்கு தமிழ்நாட்டில் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் என்ன மவுசு இருக்கிறது? தென் தமிழ்நாட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அலை வீசுகிறதா? என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடை தரப்போவது நாடாளுமன்றத் தேர்தல் தான்.

அந்த தேர்தல் முடிவுகள் தான் அதிமுகவின் தலை விதியை நிர்ணயிக்கப் போகிறது என்பது அரசியல் பார்வையாளர்களின் கணிப்பாக இருக்கிறது.
தமிழ்நாட்டு வாக்காளர்கள் தீர்மானிக்கட்டும்!

படிக்க வேண்டும்

spot_img