fbpx
Homeதலையங்கம்ஓ.பி.எஸ் பங்கேற்பும் இ.பி.எஸ் புறக்கணிப்பும்!

ஓ.பி.எஸ் பங்கேற்பும் இ.பி.எஸ் புறக்கணிப்பும்!

குஜராத்தில் பா.ஜ.க முதல்வராக பூபேந்திர படேல் இன்று மதியம் பதவி ஏற்றுக் கொண்டார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்ற இந்த விழாவில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க சென்றுள்ளார். இந்த விழாவை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புறக்கணித்து இருக்கிறார்.

பூபேந்திர படேலுக்கு வாழ்த்து தெரிவித்து பழனிசாமி அனுப்பியுள்ள கடிதத்தில், ‘ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் காரணமாக, தங்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை’ என தெரிவித்துள்ளார். இந்த விழாவைவிட அப்படி என்ன முக்கிய நிகழ்ச்சி அவருக்கு?. வேண்டுமென்றே புறக்கணித்திருக்கிறார் என்பதே உண்மை.

சமீபத்தில் டெல்லியில் நடந்த டி&20 தொடர்பான மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இது அவருக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. இதனைச் சுட்டிக்காட்டி ஓ.பன்னீர் செல்வம் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருந்ததார்.

இதனையடுத்து பாஜக விடுத்த அழைப்பின் பேரில் தற்போது அவர் குஜராத் சென்றுள்ளார். ஆனால், எடப்பாடி பழனிசாமி, அழைப்பு வந்தும் பதவியேற்பு விழாவை புறக்கணித்துள்ளார். பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு அனுப்பியதால், விழாவை அவர் புறக்கணித்ததாக கருதப்படுகிறது.

அதிமுக உறவு குறித்து சமீபத்தில் தமிழக தலைவர் அண்ணாமலை பேசுகையில், ‘அ.தி.மு.க., பிளவுபட்டு கிடக்கிறது. அக்கட்சி பிரச்னை தேர்தல் கமிஷனிலும், நீதிமன்றத்திலும் உள்ளது.

யார் பின்னாலும் சென்று கொண்டிருக்க முடியாது. பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்’ என்று பேசி இருந்தார்.

இதற்குப் பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ‘அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி என்பதை ஏற்கனவே பழனிசாமி தெளிவுபடுத்தி விட்டார். எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் தான், பா.ஜ.கவுக்கு வெற்றி கிடைக்கும்’ எனத் தெரிவித்து இருந்தார்.

நேற்றைக்கு அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அளித்த பேட்டியில், குஜராத்தை பொறுத்தவரை அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோரின் சொந்த ஊர். இதனால், அப்பகுதி மக்கள் ஓட்டு போட்டுள்ளனர்.

தமிழகத்தில் பா.ஜ.க வளர்ந்து வரும் கட்சி தான். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே, பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க, வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.

இதையெல்லாம் பார்க்கும்போது அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

கூட்டணி மோதலையே இது வெளிப்படுத்துகிறது. கூட்டணியில் இருந்து பாஜக விலகினால் அதைப்பற்றி எடப்பாடி பழனிசாமி கவலைப்பட மாட்டார் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வத்தை ஒருபோதும் எடப்பாடி பழனிசாமி ஏற்கப்போவதில்லை. அதேநேரம் ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக கைவிட விரும்பவில்லை.

இந்த நிலை நீடிக்கும் வரை இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உண்டா? இல்லையா? என்ற இரு கேள்விகளும் இருந்து கொண்டே இருக்கும்; விடை கிடைக்காது.

மதில் மேல் இருக்கும் பூனை எந்தப்பக்கம் தாவுமோ? பொறுத்திருந்து பார்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img