Homeதலையங்கம்ஓபிஎஸ்க்கு இன்ப அதிர்ச்சி தந்த தேர்தல் ஆணையம்!

ஓபிஎஸ்க்கு இன்ப அதிர்ச்சி தந்த தேர்தல் ஆணையம்!

அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான போட்டியில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முட்டிக் கொண்டு இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டி விட்டு கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இது செல்லாது என்று நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு. அதன்பிறகு இடைக்கால பொதுச் செயலாளர் பதவிக்கான கால வரம்பும் முடிவுக்கு வந்தது.

தற்போதைய சூழலில் அதிமுகவின் அதிகாரமிக்க ஒற்றை தலைமைக்கான நாற்காலியில் யாரும் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் தங்களின் பதவிகளை குறிப்பிட்டு ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் அறிக்கைகள், கடிதங்களில் அரசியல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாடு தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்க மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடிதம் எழுதியிருந்தார்.

அதில் எடப்பாடியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என குறிப்பிட்டிருந்தார். இதனால் ஓபிஎஸ் அதிர்ச்சி அடைந்தார். உடனே பதில் கடிதம் எழுதிய அவர், ஒருங்கிணைப்பாளர் நான் தான். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது மத்திய அரசு இப்படி சொல்வது சரியல்ல.

இனிமேல் அப்படி அழைக்க வேண்டாம் எனக் கூறி அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதிமுக சார்பில் 2021-22ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்குகள் நவம்பர் 29ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்டு கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதனால் ஓபிஎஸ் மீண்டும் கடுப்பானார்.

’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ விவகாரம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, அதிமுகவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பில் ஒருபடி மேலே சென்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிட்டது. இது ஓபிஎஸ் தரப்பிற்கு பேரிடியாய் வந்திறங்கியது.

இந்த நிலையில் ரிமோட் எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷினின் செயல்பாட்டு மாதிரி நிகழ்வு டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் வரும் ஜனவரி 16ஆம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்குமாறு அதிமுகவிற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கடிதம் எழுதியுள்ளார்.

அதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடப்பட்டுள்ளன. அப்படியெனில் ஓ.பன்னீர்செல்வத்தின் பதவி இன்னும் அப்படியே இருக்கிறதா? தேர்தல் ஆணையம் அவரை அங்கீகரிக்கிறதா? என்று எண்ணத் தோன்றுகிறது. இதன்மூலம் ஓபிஎஸ் கை ஓங்கிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வீழ்வதும் எழுவதுமாக ஓபிஎஸ், இபிஎஸ் என இருவரும் மோதிக்கொள்வது அதிமுகவை அழிவுப்பாதைக்கு இட்டுச்சென்று விடுமோ என அக்கட்சித் தொண்டர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

2023ம் ஆண்டிலாவது அதிமுக தன் முழு பலத்துடன் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக உருவெடுக்குமா? இபிஎஸ், ஓபிஎஸ் இடையில் நிலவும் அதிகாரப் போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

நீதிமன்றங்களும் தேர்தல் ஆணையமும் தான் அதனைத் தீர்மானிக்கும். வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் அது நடக்குமா? என்பதே கேள்வி!

படிக்க வேண்டும்

spot_img