fbpx
Homeபிற செய்திகள்நீலகிரியை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றிக் காட்டுவோம்- கிராமசபை கூட்டத்தில் ஆட்சியர் அருணா பேச்சு

நீலகிரியை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றிக் காட்டுவோம்- கிராமசபை கூட்டத்தில் ஆட்சியர் அருணா பேச்சு

உதகை ஊராட்சி ஒன்றியம், தூனேரி ஊராட்சி, மேல் தொரையட்டி சமுதாயக் கூடத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று (26ம் தேதி) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இக்கிராம சபை கூட்டத்தில், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் செயல்படும் கிராம குடிநீர் உட்கட்டமைப்பு பணிகள் குறித்தும், தூய்மை பாரத இயக்கம் குறித்தும் உள்ளிட்ட அடிப்படை தேவைகள், ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுதல் போன்ற கூட்டப்பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இங்குள்ள பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க முன்வரவேண்டும்.

ஏனெனில் முதலமைச்சர் அரசு பள்ளியின் தரத்தினை உயர்த்தவும், மாணவர் சேர்க் கையை அதிகரிக்கவும், அங்கு பயிலும் மாணவ, மாணவியர் களின் உடல்நலனை மேம்படுத்தவும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், புதுமைப் பெண் திட்டம் என பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

எனவே பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்த்து, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களையும் பெற்று கல்வி பயிலுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், துனோரி ஊராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.3.36 கோடி மதிப்பீட்டில் 70 பணிகள் எடுக்கப்பட்டு, அவற்றில் இதுவரை ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் 47 பணிகள் முடிக்கப்பட்டு, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளும் விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக அமைய நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மகளிர் திட்டத்தின் சார்பில் 5 மகளிர் சுய உதவிக்குழுக் களுக்கு தொழில் தொடங்க சமுதாய முதலீட்டு நிதியின் கீழ் தலா ரூ.1 இலட்சத்திற்கான காசோலைகளையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.1,000/- மதிப்பில் மருந்து பெட்டகங்களையும், 5 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தலா ரூ.2,000/- மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்களையும், தூனேரி ஊராட்சியில் பணிபுரியும் 5 தூய்மை காவலர்களுக்கு நலவாரிய அட்டைகளையும் வழங்கினார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சித் தலைவர் தோட்டக்கலைத்துறை, மாவட்ட சமூக நலத்துறை, சுகாதாரத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, மேல் தொரையட்டி கோயில் வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், பெண் குழந் தைகளை காப்போம், பெண் குழந்தைகளை கற்பிப்போம், வாக்காளர் உறுதிமொழி, தொழு நோய் விழிப்புணர்வு ஆகிய உறுதிமொழிகளை அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர்.

இக்கிராம சபை கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கௌசிக், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பாலகணேஷ், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலாமேரி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கல்பனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மணிகண்டன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம் சாந்தகுமார், உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் (எ) மாதன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பிரவீணாதேவி, தூனேரி ஊராட்சித்தலைவர் உமாவதி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் (பொ) ஷோபனா, உதகை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், ஸ்ரீதர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img