தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளில் பணத்தை இழந்ததால் 30க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டனர். இதனால், தமிழக அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்து அக்டோபர் 1-ம் தேதி அவசரச் சட்டம் கொண்டுவந்தது.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு அவசர சட்டத்திற்கு மாற்றாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை அக்டோபர் 19-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இதையடுத்து, இந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு வியாழக்கிழமை (நவம்பர் 24) கடிதம் அனுப்பினார். இதற்கு தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனிடையே, தென்காசி மாவட்டம், சங்கரன் கோயில் அருகே கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் வசித்து வந்த ஒடிசாவைச் சேர்ந்த இளம் பெண் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் மன வேதனைக்கு உள்ளாகி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை மணலி கால் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பார்த்திபன் (36) நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி இன்னும் ஓப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தி வரும் நிலையில், தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டம் தற்போது காலாவதி ஆகிவிட்டது.
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று சந்தித்து ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்திற்கு அனுமதி தருவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நேரில் வலியுறுத்தினார். இதுகுறித்து விரைந்து பரிசீலிப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்ட மசோதாவுக்கு ஒட்டுமொத்த தமிழகமும் ஆதரவாக உள்ளது. தமிழகத் தலைவர்கள் அனைவரும் இதே கருத்தை முன்னிறுத்தி ஆளுநருக்கு இது அழகல்ல
என கடுமையாகச் சாடி வருகிறார்கள்.
மசோதா காலாவதியாகும் வரை ஆளுநர் காலதாமதம் செய்வது புரியாத புதிராக உள்ளது. தமிழர்களின் உயிரோடு விளையாட யாரையும் அனுமதிக்க முடியாது.
ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், இனியும் தாமதிக்காமல் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்!