ஆன்லைன் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என பல்வேறு தரப்பினர் கருத்துக்களையும், பல்வேறு புகார்களையும் அளித்து வருகின்றனர்.
இதுபோன்ற புகார்கள் இந்தியா முழுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக ஆன்லைன் ரம்மியில் அதிகமானோர் பணத்தை இழந்து தற்கொலை வரை சென்ற நிகழ்வுகளையும் நாம் பார்த்து இருக்கின்றோம். அந்த வகையில் மாநில அரசாங்கங்கள் இதனை கட்டுப்படுத்தக் கூடிய வகையில் நடவடிக்கையை எடுத்து வருகின்றது.
குறிப்பாக தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநில அரசாங்கம் ஆன்லைன் ரம்மிக்கு எதிரான உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக ஒரே மாதிரியான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு தற்போது எடுத்துள்ள முடிவு பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்தியாவில் இனி ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விதிகளை வகுக்கவும், அதனை கண்காணிக்கவும் நோடல் ஏஜென்சியாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செயல்படும் என தெரிவித்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டுக்கான நோடல் ஏஜென்சியாக ஒன்றிய அரசு இனி செயல்படுவதால் மாநில அரசாங்கங்களால் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக எந்த முடிவும் எடுக்க முடியாது.
அதை கட்டுப்படுத்துவது, தடை செய்வது இனி ஒன்றிய அரசின் கையில் உள்ளது. இந்த முடிவால் பொதுமக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒன்றிய அரசு நோடல் ஏஜென்சியாக செயல்படுவதற்கு ஆன்லைன் கேம் நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தராத நிலையில் ஒன்றிய அரசு இப்படியொரு முடிவை எடுத்து இருக்கிறது.
ஒன்றிய அரசு இப்போது தான் முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு சட்டமாகி அது என்றைக்கு அமலாகப் போகிறதோ தெரியவில்லை.
அப்படியே நாடு முழுவதும் ஒரே சட்டத்தை ஒன்றிய அரசு இயற்றினாலும் அது ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக இருந்து விடுமோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் நிழலாடுகிறது.
தற்கொலைகள் தொடராமல் இருக்க என்ன தான் வழி? ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க ஏன் இந்த தடுமாற்றம்?
இப்போதைக்கு ஆன்லைன் ரம்மிக்கு தடை என்பது கானல் நீர் தான் போலும்!