fbpx
Homeபிற செய்திகள்பளு தூக்கும் மூதாட்டியின் ஆர்வம்.. முயற்சி.. வெற்றி…!

பளு தூக்கும் மூதாட்டியின் ஆர்வம்.. முயற்சி.. வெற்றி…!

திரைப்படம் ஒன்றில் விவேக் ஒட்டி வைக்கும் அட்டை எடை கற்களை தூக்கி எறிந்து விட்டுச் செல்வார் நடிகை பரவை முனியம்மா. ஆனால் தனது பேரன் தூக்கும் உண்மையான 50 கிலோ எடைத் தட்டுகளை சர்வ சாதாரணமாக தூக்குகிறார் 82 வயது மூதாட்டி கிட்டம்மாள்.

இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி முத்து கவுண்டர் அவன்யுவில் வசித்து வரும் வெங்கட்ராமன் என்பவரின் துணைவியார். பளுதூக்கும் வீரர்களான இவரது பேரன்கள் ரோகித் மற்றும் ரித்திக் ஆகியோர் உடற்பயிற்சி செய்வதை கண்டு தானும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஆசைபட்டுள்ளார் கிட்டம்மாள்.

பேரன்களின் உதவியால் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் தொடர்ச்சியாக உடற்பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில் பேரன்களோடு உடற்பயிற்சி கூடத்திற்கும் சென்றுள்ளார். அங்கு 25 நாட்கள் பளு தூக்கும் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

பாட்டியின் ஆர்வத்தைக் கண்ட உடற்பயிற்சியாளர் சதீஷ், அவரை கோவையில் கடந்த மே ஒன்றாம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் பங்கேற்க வைத்துள்ளார்.

பெண்களுக்கான பளு தூக்கும் பிரிவில் பங்கேற்ற பாட்டி கிட்டம்மாள் 50 கிலோ எடையை தூக்கி முதல் முயற்சியிலேயே ஐந்தாம் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். தனது சாதனை குறித்து கிட்டம்மாள், ”பெண்கள் எதையும் துணிச்சலுடன் செய்ய வேண்டும். எனது ஆர்வத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் எனது உணவு முறையே காரணம்.

எனது கணவர் ஊட்டச்சத்து உணவுகளை எனக்கு வாங்கி கொடுத்து வெற்றி பெற ஊக்கமளித்தார்” என்று மகிழ்வுடன் கூறுகிறார். இன்றைய இளைஞர்கள், உணவு முறையை சரியாகக் கடைப்பிடித்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்பதை உணர்த்தும் வகையிலும், திறமைக்கு வயது தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையிலும் பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற பாட்டி கிட்டம்மாளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

வயது, தளர்ந்த பேச்சு, முதுமை உருவம் , இவற்றை வைத்தெல்லாம் எடை போட முடியாத சேலை கட்டிய இரும்பு பெண்மணியாக திகழும் கிட்டம்மாள் நமக்குச் சொல்லித்தரும் பாடத்தின் தலைப்பு என்ன தெரியுமா? ஆர்வம்… விடாமுயற்சி…வெற்றி!

படிக்க வேண்டும்

spot_img