Homeதலையங்கம்நிர்மலா சீதாராமனின் வெற்று முழக்க பட்ஜெட்!

நிர்மலா சீதாராமனின் வெற்று முழக்க பட்ஜெட்!

பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியின் இறுதி பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட் உரையில், கடந்த ஆண்டுகளில் பாஜக செய்தவை என நீண்டவோர் உரையை அளித்தார் அவர். எனினும், நாட்டின் பொருளாதார சிக்கல்கள் தொடர்பான எதையும் உரை கொண்டிருக்கவில்லை.

பாஜகவின் சாதனைகளாக நிதியமைச்சரால் கூறப்பட்ட பல செய்திகள், ஆய்வறிக்கைகளுக்கு முற்றும் புறம்பாக அமைந்துள்ளது. 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டு விட்டனர், மக்களின் வாழ்வாதாரம் மேம்படுகிறது என தெரிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

ஆனால், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட செய்தி ஊடகங்களின் ஆய்வுகளில் உண்மை வெளிப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டின் வேலைவாய்ப்பு விழுக்காடு சரிந்து கொண்டே செல்கிறது.

வேளாண் துறையில் அதிகரிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு காலநிலை சார்ந்தது. இந்த சூழலில் மக்களின் வாழ்வாதாரம் எந்த வகையில் மீண்டிருக்க இயலும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்தியாவில் மக்களின் தனிநபர் வருவாய் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அரசின் புள்ளி விவரம் இவ்வாறிருக்க, அப்பாவி மக்கள் பலர் இன்னும் போதுமான வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர். தேசிய புள்ளியியல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மக்களின் மாத வருமானம் 10 &- 12 ஆயிரம் ரூபாயாக உள்ளது. நிலைமை இப்படி இருக்க 50 சதவீதம் தனிநபர் வருமானம் உயர்ந்திருப்பதாக கூறுவதை எப்படி ஏற்க முடியும்?

விலைவாசி உயர்வால் வாழ்க்கை நடத்தவே சிரமப்படும் அளவுக்கு அவர்களின் நிலை உள்ளதை காண முடிகிறது. இவ்வாறிருக்க, இந்த தனிநபர் வருவாய் உயர்வு என்பது யாருக்கு என்ற கேள்வி எழுகிறது.

அம்பானி, அதானிகளின் வருவாயும், வாழ்க்கைத் தரமும் உயர்ந்ததைத்தான் நிதியமைச்சர் இவ்வாறு குறிப்பிடுகிறாரா என மக்கள் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

இவை மட்டுமின்றி, 2 கோடி வீடுகள் கட்டித்தருவதாகவும் உறுதியளித்துள்ளனர். முன்பு உறுதியளித்த வீடுகளே கட்டிமுடிக்கப்படாத நிலையில், அதிகப்படியாக 2 கோடி வீடுகள் என்ற வாக்குறுதி யதார்த்தத்துக்கு புறம்பாகவே இருக்கும்.
ஜி.எஸ்.டி வரி விதிப்பில் மாதாந்திர வருவாய் ஏற சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும் தனியாக எந்த அறிவிப்பும் இல்லை.

ஆண்டு வரி வருமானம் ஏறத்தாழ 1.73 லட்சம் கோடியை தொட்டிருக்கின்ற நிலையில், ஜி.எஸ்.டி வரியில் உள்ள பல நிலைகளை ஒருங்கிணைத்து ஒரேவரி அறிவிப்பு வெளிவரும் என்கிற மிகப்பெரும் எதிர்பார்ப்பு வணிகர்களிடம் இருந்து வந்தது.

அந்த எதிர்பார்ப்பு பொய்த்துப் போய் இருக்கிறது. ஒரே நாடு ஒரே வரி, ஒரே தேர்தல் என்ற பிரதமரின் ஒற்றை மந்திர முழக்கம் இங்கே ஓய்வு எடுத்துக்கொண்டது போலும்.

நிதி நெருக்கடி, மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் சிக்கல், வேலைவாய்ப்பின்மை என எவ்வித நெருக்கடிக்கும் தீர்வு தரும் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை.

வருமான வரிவிலக்கு ரூ.10 லட்சமாக உயரும் என்றும் வணிகர்கள் எதிர்பார்த்தார்கள். அதுவும் நடக்கவில்லை. குழந்தைகளுக்கு மிட்டாய் காட்டி ஏமாற்றுவது போல வீட்டில் சூரிய மின்சாரம் தயாரித்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்பது போன்ற ஒருசில வரவேற்கத்தக்க அறிவிப்புகளை மட்டும் தந்திருக்கிறார், நிர்மலா சீதாராமன்.

தொடர்ந்து மூன்றாவது முறையும் வென்றுவிடலாம் என்ற கனவில், நிகழ்கால சிக்கல்களை வழக்கம் போல் கண்டும், காணாமல் கடந்திருக்கிறது பாஜக அரசு.
வரலாறு காணாத வளர்ச்சியடைந்து விட்டோம் என்பது போல வெற்று முழக்கங்களையும், வாய்ச்சவடால்களையும் தவிர பட்ஜெட்டில் எதுவும் இல்லை.
ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் ஏமாற்றம் தந்துள்ளது இடைக்கால பட்ஜெட்!

படிக்க வேண்டும்

spot_img