fbpx
Homeதலையங்கம்நெய்வேலி போராட்டத்தில் வன்முறை - எச்சரிக்கை!

நெய்வேலி போராட்டத்தில் வன்முறை – எச்சரிக்கை!

நெய்வேலியில் இயங்கி வருகிறது அனல் மின் உற்பத்தி நிலையமான என்.எல்.சி. இந்த நிறுவனத்தின் சுரங்கப் பணிகளுக்காக அருகில் உள்ள கிராமங்களில் இருந்து நிலம் கையப்படுத்தப்பட்டது.

அதற்கான பணிகள் முடிந்து, தற்போது குழாய் அமைக்கும் பணியில் என்.எல்.சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் கையப்படுத்தப்பட்ட நிலத்தில், நிலத்தின் உரிமையாளர்களாக இருந்தவர்கள் தொடர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது என்.எல்.சி நிர்வாகம் விவசாயம் செய்யப்பட்ட நிலங்களில் குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி, அதன் தலைவர் அன்புமணி தலைமையில் நேற்று என்.எல்.சி.,யை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. அப்போது பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் உடன் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.

ஆனால், அன்புமணி அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டார், காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இதனால் அங்கு பா.ம.க.,வினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மேலும், அன்புமணி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க.,வினர் போலீசாரின் வாகனங்களை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர். கல்வீச்சில் பொதுமக்கள், போலீசார் என 20 பேர் காயமடைந்துள்ளனர்.

தண்ணீரை பீச்சியடித்து போராட்டக்காரர்களை விரட்டியதோடு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுக்க வேண்டிய சூழ்நிலையும் போலீசாருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

இதெல்லாம் தவிர்க்கப்பட்டு இருக்க வேண்டும். போராட்டத்தை போலீசார் மிக கவனமாக கையாண்டு இருக்கிறார்கள். உடனடியாக டிஜிபி சங்கர் ஜிவால் நெய்வேலி விரைந்து வந்து ஆய்வு செய்து காயமடைந்தவர்களுக்கு நேரில் ஆறுதல் தெரிவித்து இருக்கிறார்.

சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்த போராட்டத்தில் வன்முறை நடந்திருக்கக் கூடாது என்பது தான் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

அறவழியில் போராட்டம் நடத்தலாம். அதற்கு அரசும் அனுமதி தருகிறது. பொதுவாக எந்தக்கட்சியாக இருந்தாலும் அதன் தலைவர்கள் தலைமையில் போராட்டம் நடந்தால் அவர்களை காவல்துறையினர் கைது செய்வது வழக்கமான ஒன்று தான். அவர்களை அப்புறப்படுத்தி விட்டு மாலையில் விடுவித்து விடுவார்கள்.

அதேபோலத்தான் நெய்வேலி போராட்டத்திலும் கைது செய்யப்பட்டார்கள். ஆனாலும் பாமகவினர் வன்முறையை கையிலெடுத்து விட்டனர். இது தவறான முன்னுதாரணமாகும்.

பிரச்னைகளை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். என்.எல்.சிக்கு எதிராக நடந்த பேராட்டம் வன்முறையாக மாறியது கண்டிக்கத்தக்கது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.

வன்முறை களத்தை வேண்டுமென்றே உருவாக்குவதை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது` என அமைச்சர் தங்கம் தென்னரசு உடனடியாக எச்சரித்தார்.

எனவே, இனி வருங்காலத்தில் எந்தப் போராட்டமாக இருந்தாலும் அதனை எந்தக் கட்சி நடத்தினாலும் எந்தத் தலைவர் தலைமையேற்றாலும் அறவழியில் தான் நடக்க வேண்டும். வன்முறை தலைதூக்காதபடி போராட்டக்காரர்களை தலைவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அது தான் ஜனநாயக வழிமுறையாக இருக்கும். அதனைத் தான் தமிழக மக்கள் விரும்புவார்கள்.

வன்முறை ஒருபோதும் வெற்றி பெறாது!

படிக்க வேண்டும்

spot_img