fbpx
Homeதலையங்கம்நீட் தேர்வு - இவ்வளவு கட்டுப்பாடுகள் தேவையா?

நீட் தேர்வு – இவ்வளவு கட்டுப்பாடுகள் தேவையா?

நாடு முழுவதும் மருத்துவ கல்விக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நேற்றய தினம் நடைபெற்றுள்ளது. தேர்வுக்கான அறிவுறுத்தல்களை தேசிய தேர்வு முகமை வழங்கியிருந்தது.

அவற்றில் சில மன உளைச்சல் தரும் தேவையற்றக் கட்டுப்பாடுகளாக இருக்கின்றன.
தேர்வு மையங்களுக்குள் பேப்பர் துண்டு சீட்டுகள், பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பவுச், கால்குலேட்டர், ஸ்கேல், எலக்ட்ரானிக் பேனா, லாக் அட்டவணை, கையில் அணியும் ஹெல்த் பேண்ட், தோள்பை, பிரேஸ்லெட், தொலைபேசி, மைக்ரோபோன், புளூடூத், இயர்போன், பெல்ட், பர்ஸ், வாட்ச், ஆபரணங்கள், உணவு பொருள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

தேர்வு தொடங்கி முதல் ஒரு மணிநேரம் மற்றும் கடைசி அரை மணிநேரம் மாணவர்கள் கழிவறை செல்ல அனுமதி கிடையாது. மாணவர்கள் சாதாரண செருப்பு, குறைந்த உயரம் உள்ள காலணிகள் அணிந்து வர அனுமதி உண்டு. ஷூ அணிந்து வர அனுமதி கிடையாது.

தேர்வு முடியும் முன்பே விடைத்தாளை ஒப்படைத்துவிட்டு வெளியே வரக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. கம்மல் போடக்கூடாது, இந்த மாதிரித்தான் உடை உடுத்த வேண்டும் என்பதெல்லாம் அதிகபட்ச கெடுபிடியாக இருக்கிறது.

இந்நிலையில், இந்த கட்டுப்பாடுகள் குறித்து பெற்றோர்கள் மிகுந்த கவலையை வெளிப்படுத்தி உள்ளனர். மாணவ, மாணவிகள் மீது மிகுந்த கெடுபிடி காட்டப்படுகிறது. அவர்களைத் திருடர்களை போல நடத்துகிறார்கள். குழந்தைகள் படித்து முன்னேறத் தான் வந்திருக்கிறார்கள். திருட்டுத்தனம் செய்ய அல்ல என பெற்றோர் கொதிப்புடன் விமர்சித்து வருகின்றனர்.

முறைகேட்டை தடுக்கிறோம் என ஓவராக கறார் கட்டுகிறார்கள். 2 மணிக்குதான் தேர்வு என்றாலும், 11.30 மணிக்கே வர சொல்லிவிடுகிறார்கள். உள்ளே செல்லும் மாணவர்கள் மாலை 5.30க்குதான் வெளியே வருகிறார்கள்.

இடைபட்ட நேரத்தில் அவர்களுக்கு உணவு எதும் இருக்காது. கண்ணாடி பாட்டில் அல்லது, கண்ணாடி போன்ற தெளிவான பாட்டிலில் மட்டுமே தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது.
நீட் தொடங்கியதிலிருந்து அதற்கான கெடுபிடிகள் குறித்த சர்ச்சைகள் நீடித்து வருகிறது. நீட் தேர்வின் போது விதிக்கப்படும் அளவிற்கு அதிகமான கட்டுப்பாடுகள், ஒன்றிய, மாநில தேர்வாணையம் நடத்தும் பிற தேர்வுகளில் காட்டப்படுவதில்லையே. ஏன்?

எத்தனையோ தொழில்நுட்ப வசதிகள் வந்து விட்ட காலத்தில் தேர்வைக் கண்காணிப்பதற்கு வேறு வழிகளா இல்லாமல் போய்விட்டது? தேவைப்பட்டால் தேர்வறைகளில் கூடுதல் கண்காணிப்பாளர்களை நியமிக்கலாம்.

சிறுநீரக பாதிப்புள்ள ஒரு மாணவி, டயப்பர் அணிந்து தேர்வு எழுதக்கூட நீதிமன்றப் படியேற வேண்டிய அவசியத்தை ஏன் உருவாக்குகிறீர்கள்?.

எல்லா போட்டித் தேர்வுகளும் ஒன்று தான். மாணவ, மாணவிகளையும் பெற்றோரையும் அவமதிக்கும் வகையிலும் மன உளைச்சலைத் தரும் வகையிலும் நீட் தேர்வில் விதிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்த தேவையான நடவடிக்கைகளை தேசிய தேர்வு முகமை ஆராய வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img