fbpx
Homeபிற செய்திகள்பிரதமர் மோடி கோவை, நீலகிரியில் பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளது

பிரதமர் மோடி கோவை, நீலகிரியில் பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளது

கூட்டணி கட்சியினர் சந்திப்பு கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றதையடுத்து மத்திய இணையமைச்சரும், நீலகிரி பாராளுமன்ற பாஜக வேட்பாளருமான எல்.முருகன் மேட்டுப்பாளையம் வருகை தந்தார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க வின் கூட்டணி கட்சிகளான பா.ம.க, ஐ.ஜே.கே, அமமுக, ஓபிஎஸ் அணி ஆகியோரின் உள்ளூர் பிரமுகர்களை மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் அரங்கில் சந்தித்து பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: நேற்று ஊட்டியில் வேட்புமனு தாக்கல் செய்த போது நடந்த அசௌகரியமான காரியத்துக்கு காவல்துறையின் மெத்தன போக்கும், சரியாக திட்டமிடாதலுமே காரணம். பிரதமர் நரேந்திர மோடி நீலகிரியில் பிரச்சாரம் செய்வதற்கு கோவை மற்றும் நீலகிரிக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

டாஸ்மாக் கடைகளை குறைப்போம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அதிகப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு கிராமங்களிலும் பள்ளிகூடங்கள், அங்கன்வாடி போன்ற மக்களின் அடிப்படை வசதிகள் இருக்கிறதோ இல்லையோ டாஸ்மாக் கடைகள் திறந்து வைத்துள்ளனர்.

போதைப் பொருள் சப்ளை உள்ளது. நாட்டையே அதிர்ச்சிக்குள்ளான போதை கடத்தல் வழக்கில் திமுக மற்றும் விசிக நிர்வாகிகள் இருக்கிறார்கள். உலகின் சுற்றுலா தளங்களில் பேர் போன நீலகிரியை இன்று கூகுலில் தட்டினால் 2-ஜி என்றுதான் வருகிறது. அந்தளவு இத்தொகுதி மக்களை தற்போதைய எம்.பி அவமானப்படுத்தியுள்ளார்.

இந்திய அரசியல் சாசனத்தையும் அம்பேத்கரையும் பா.ஜ.க மதிக்கிறது. என் மண் என் மக்கள் யாத்திரை மற்றும் பிரதமரின் தமிழக வருகைக்கு பின்னர் தமிழகத்தில் பா.ஜ.க வலுவான கூட்டணியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, நீலகிரி மக்களைத் தொகுதி பொறுப்பாளர் நந்தகுமார், மாநிலச் செயற்குழு உறுப்பினர் சதீஷ் குமார், கோவை வடக்கு மாவட்ட துணைத் தலைவர் விக்னேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதைத் தொடர்ந்து, மேட்டுப் பாளையம் தனியார் தங்கும் விடுதியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பிரசாரம் குறித்து எல்.முருகன் ஆலோசனை நடத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img