மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் உள்ள காந்தி மைதானத்தில் ஏராளமான உருளைக்கிழங்கு மண்டிகள் செயல்பட்டு வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், ஊட்டி, கூடலூர் மற்றும் வெளி மாநிலங்களான மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம்,குஜராத், மேற்கு வங்காளம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் உருளைக்கிழங்குகள் இந்த மண்டிகளுக்கு கொண்டு வரப்படுகின்றன.
பின்னர், மண்டிகளில் கிழங்குகள் தரம் பிரிக்கப்பட்டு சாக்கு மூட்டைகளில் ஒரு மூட்டைக்கு 45 கிலோ என்ற அளவில் கட்டப்படுகிறது. பின்னர், ஏல முறையில் வியாபாரிகள் விற்பனைக்காக வாங்கிச் செல்லப்படுகின்றன.
பின்னர், இங்கிருந்து விற்பனைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. தற்போது உத்தர பிரதேசம்,குஜராத், மேற்கு வங்காள மாநிலங்களில் உருளைக்கிழங்கு சீசன் முடிந்துவிட்டது.
நீலகிரி மாவட்டத்திலும் தற்போது உருளைக்கிழங்கு பறிக்கும் பணி ஏறத்தாழ முடிவடையும் தருவாயில் உள்ளது. எனவே, நீலகிரி மாவட்டத்தில் இருந்தும் குறைந்த அளவிலான உருளைக்கிழங்குகள் மட்டுமே மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு கொண்டு வரப்படுகின்றன.
இந்த நிலையில் ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக வட மாநிலங்களில் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே போராட்டத்திற்கு முன்னர் அங்கிருந்து கிளம்பிய உருளைக்கிழங்கு ஏற்றப்பட்ட லாரிகள் மட்டுமே தற்போது மேட் டுப்பாளையம் மண்டிகளுக்கு கொண்டு வரப்படுகின்றன.
தற்போது புதிதாக உருளைக்கிழங்குகள் கொண்டு வரப்படுவதில்லை. இதனால் வழக்கமாக மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து நாளொன்றிற்கு 25 முதல் 30 லாரிகளில் சுமார் 30 டன் அளவிற்கு உருளைக்கிழங்குகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். ஆனால், தற்போது இரண்டு அல்லது மூன்று லாரிகளில் மட்டுமே உருளைக்கிழங்குகள் கொண்டு வரப்படுகின்றன.
எனவே, ஊட்டி உருளைக்கிழங்கு ஒரு மூட்டை 45 கிலோ ரூ.1200 முதல் ரூ.1700 வரை விற்பனையாகிறது. மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டிகளுக்கு ஊட்டியில் இருந்து மட்டுமே உருளைக்கிழங்குகள் அதிகளவு வருகிறது.
மற்ற மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்து உள்ளது. இதனால் ஊட்டி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.