சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தை கையில் எடுத்து, தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக குற்றம்சாட்டி வருகின்றன.
சிபிஐ விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை போன்றோர் வற்புறுத்திய போதிலும் சிபிசிஐடி போலீசார் அதிவேகமாகச் செயல்பட்டு பலரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்து தண்டிக்கப்படுவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இது போன்ற சம்பவங்கள் இனியும் நிகழாவண்ணம் இருக்கத் தேவையான தொடர் நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார்.
அவர் எடுத்த முதன்மையான நடவடிக்கை தான் சென்னை பெருநகர காவல்துறைக்குப் புதிய ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம். அதேபோல சட்டம்& ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக அனுபவம் வாய்ந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது வரவேற்கத் தக்கது.
அதனால் மாற்றப்பட்ட அதிகாரிகள் திறனற்றவர்கள் என்பதல்ல. சில நேரங்களில் சூழ்நிலைக்கேற்ப அதிகாரிகள் மாற்றம் மிக அவசியமாகும். அப்போது தான் நடவடிக்கைகளில் புதிய உத்வேகம் இருக்கும்.
கூலிப்படைகளின் கொட்டத்தையும், ரவுடிக் கும்பலையும் அடியோடு ஒழிக்கவேண்டும். கையில் ஆயுதத்தை எடுப்பதற்கே அஞ்சம் வகையில் அவர்கள் மீதான நடவடிக்கைகள் பாய வேண்டும். அவர்களின் செயல்பாட்டை முடக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள ரவுடிகளின் பட்டியல் மீண்டும் அதிரடியாக சரி பார்க்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் ரவுடிகளின் எண்ணிக்கை 6,000 பேர் என்றும் இவர்களில் 758 பேர் சிறையில் உள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.
இவர்களைத் தவிர மற்ற ரவுடிகளை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
இதே போல் மாநிலம் முழுவதும் உள்ள 21,000 ரவுடிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என அனைத்து மாநகரக் காவல் ஆணையர்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றம் செய்பவர் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் இனி சமரசத்திற்கு இடமே இருக்காது என்பதிலும் சந்தேகமில்லை.
அரசோடு இணைந்து, காவல்துறை உயர் அதிகாரிகள் அனைவரும் விழிப்புடன் செயல்பட்டு கூலிப்படைகள், ரவுடிகளின் கொட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து சட்டம் ஒழுங்கை பேண வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்!