fbpx
Homeதலையங்கம்பயனுள்ள வானவில் மன்றம்!

பயனுள்ள வானவில் மன்றம்!

‘எங்கும் அறிவியல் யாதும் கணிதம்என்பதை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் 13,210 அரசுப் பள்ளிகளில் வானவில் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார். இந்த திட்டத்திற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

25 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைவார்கள். ஏன், எதற்கு, எப்படி என்ற சாக்ரடீஸ் மனப்பாங்கில் எதையும் கேள்வி கேட்டு ஆராயும் பழக்கத்தை இளமை பருவத்திலே... 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளிடம் உருவாக்கிட இத்திட்டம் துணை நிற்கும்.

அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை ஏற்படுத்துதல், இயல்பாகவே உள்ள படைப்பாற்றல் திறனை வெளிக்கொணர்தல், புதுமைகளைக் காணும் மனப்பாங்கை வளர்த்தெடுத்தல், தமக்கான மொழியில் அறிவியல் மொழி பழகுதல் ஆகியவையே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்திற்காக தமிழ்நாடு முழுவதும் 710 ஸ்டெம் கருத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் நடமாடும் அறிவியல் மற்றும் கணித பரிசோதனை ஏதுவாளர்களாக செயல்படுவார்கள்.

மேலும், அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு எளிய அறிவியல் பரிசோதனைகளுக்கான கருவிகளை உடன் எடுத்து வருவார்கள். அரசுப் பள்ளிகள் தோறும் வரும் கருத்தாளர்கள் பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து, ஆசிரியர்கள் துணையோடு மாணவர்களுக்கு பரிசோதனைகளை செய்து காண்பிப்பார்கள்.

மேலும், ஆசிரியர்களுக்கு அறிவியல் மற்றும் கணித வல்லுநர்களுடன் இணைய வழி (டெலிகிராம்) கலந்துரையாடலுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவ, மாணவிகள் தங்கள் அறிவியல், கணித அறிவைப் பெருக்கிக் கொள்ளவும் முடியும்.

இத்திட்டம் குறித்து.மாணவர்கள் அறிவியலையும் கணிதத்தையும் கண்டு அச்சப்படத் தேவையில்லை. மனிதனின் மூளையில் தான் அறிவியலும் கணிதமும் அடங்கியுள்ளது.

அவற்றை வெளிக்கொணர வானவில் மன்றம் வழிகாட்டியாக அமையும்` என்று தெரிவித்துள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வானவில் மன்றத் திட்டத்தை திறம்பட நடத்தும் மகத்தான கல்விப் பணியை முன்னெடுத்து இருக்கிறார்-.

வானில் பல வண்ணங்களில் தென்படும் வானவில் போல மாணவ, மாணவிகளை ஈர்த்து, வானவில் மன்றம் திட்டம் அறிவுப் புரட்சியை ஏற்படுத்தப் போவது நிச்சயம்.

தமிழக அரசின் வெற்றித் திட்டங்களில் இதுவும் ஒன்று; பாராட்டுகள்!

படிக்க வேண்டும்

spot_img